

கேரள மாநிலம் திருவனந்தபுரத் தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயருக்கு கடந்த ஆண்டு ஜூலையில் கடத்திவரப்பட்ட ரூ.15 கோடி மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.
தேசிய புலனாய்வு அமைப்பு, சுங்கத்துறை, அமலாக்கத்துறை ஆகியவை இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தன. முதல்வர்பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த அதிகாரி சிவசங்கரன், முதன்மை செயலாளர் அலுவலகத்தில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் சுங்கத்துறை, அமலாக்கத்துறை சார்பில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் ஸ்வப்னா சுரேஷுக்கு ஏற்கெனவே ஜாமீன் கிடைத்தது.
எனினும், தேசிய புலனாய்வு அமைப்பு சார்பில் காபிபோசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் ஸ்வப்னா சுரேஷ் சிறையிலேயே இருந்தார். இவ்வழக்கில் ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் ஸ்வப்னா மனு தாக்கல் செய்தார். ரூ.25 லட்சத்துக்கு ஜாமீன் பத்திரம், அதே தொகைக்கு இரண்டு பேரின் உத்தரவாதம் அளிக்க உத்தரவிட்டு ஸ்வப்னா சுரேஷுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கில் தொடர்புடைய 7 பேருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. - பிடிஐ