

சிறைவாசிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறைக் காவலர்களுக்கு ஆயுதமின்றி தனித்துப் போராடும் ‘க்ரவ் மேகா’ தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்தப்பள்ளிகள் குற்றவியல் நீதியமைப்பு முறையின் முக்கிய கூறாக விளங்குகின்றன. நீதிமன்றங்கள் விதிக்கும் தண்டனைகளை நிறைவேற்றுவது, கைதிகளின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாப்பது, மனித உரிமை மீறலுக்குஇடமில்லாமல் கண்ணியத்துடன் நடத்துவது, சீர்திருத்தம், மறுவாழ்வு, திறன்சார் பயிற்சிகள் அளித்து பொறுப்பான குடிமக்களாக அவர்களை மாற்றுதல்ஆகியவை சிறைச்சாலைகளின் பணிகளாக உள்ளன.
தமிழகத்தில் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையின் கீழ் 142 சிறைகள் உள்ளன. இதில் மத்திய சிறைச்சாலைகள் 9, பெண்களுக்கான தனிச்சிறைகள் 5, மாவட்ட சிறைச்சாலைகள் 14, ஆண்களுக்கான கிளைச் சிறைகள் 89, பெண்களுக்கான கிளைச் சிறைகள் 7, ஆண்களுக்கான தனி கிளைச் சிறை 1, பெண்களுக்கான தனி கிளைச் சிறைகள் 2, இளம் குற்றவாளிகளுக்கான சீர்திருத்தப் பள்ளிகள் 12 மற்றும் திறந்தவெளி சிறைச்சாலைகள் 3 ஆகியவை அடங்கும்.
இந்த சிறைகளில் 23,592 பேருக்கு இடவசதி உள்ளது. இவர்களை கண்காணித்து வழிநடத்த 5,452 சிறைத்துறைபணியாளர்கள் உள்ளனர். பொதுவாக சிறைச்சாலைகளில் மரண தண்டனை,ஆயுள் தண்டனை, 3 மாதங்களுக்கு மேல்தண்டனை பெற்றவர்கள், பெருங்குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்டவர்கள், கொடுங்குற்றவாளிகள், தொடர்ந்துகுற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், சக கைதிகளுக்கு ஊறு விளைவிக்கக்கூடியவர்கள், கடன் வாங்கி திருப்பிசெலுத்த முடியாமல் சிறைபடும் சிறைவாசிகள், தடுப்பு காவல் மற்றும் நீதிமன்ற காவல், விசாரணை சிறைவாசிகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சிறைத்துறை நன்னடத்தை அலுவலர்கள், சிறைவாசிகளுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்குமிடையே ஒருஇணைப்பு பாலமாக செயல்படுகின்றனர். நுண்ணறிவு மற்றும் விழிப்புப்பணி பிரிவு சிறைக்குள் கிடைக்கும் நுண்ணறிவு தகவல்களை ரகசியமாக சேகரித்து இதர புலனாய்வு அமைப்புகளுக்கு பரிமாற்றம் செய்யும்.
நீதிமன்ற வழக்குகளை நிர்வகித்து,குற்ற வழக்குகளில் தகுந்த ஆலோசனை வழங்க சட்ட ஆலோசனைப் பிரிவும், சிறைக்குள் நவீன தொழில்நுட்பத்தை கையாள தொழில்நுட்ப பிரிவும் உள்ளது.
இதுதொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
சிறைக்குள் ஏற்படும் அசாதாரண, அவசரகால நெருக்கடி, பதற்றமான சூழலை திறமையாக சமாளிக்கும் நோக்கில் வேலூரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் சிறைக் காவலர்களின் மனஉறுதியை மேம்படுத்தும் வகையில் குத்துச்சண்டை, ஜூடோ, மல்யுத்தம் ஆகியவற்றின் நுணுக்கங்களைக் கொண்ட ‘க்ரவ் மேகா‘ எனும் ஆயுதமின்றி தனித்துப்போரிடும் தற்காப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுதவிர, சென்னையில் உள்ள மருதம் காவல்துறை அதிரடிப்படை பயிற்சிபள்ளியில் வெடிகுண்டுகளைக் கண்டறிந்து செயல் இழக்கச் செய்தல், அதிரடிப்படைக்கான பயிற்சி போன்றவையும் அளிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.