

நகர்ப்புற தேர்தல் பணிகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டும் என்று தேர்தல் அலுவலர்களுக்கு, மாநில தேர்தல் ஆணையர் வெ. பழனிகுமார் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக மாநில தேர்தல்ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விழுப்புரம், காஞ்சிபுரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக, மாவட்ட தேர்தல் அலுவலர்களான மாவட்ட ஆட்சியர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் சென்னை ரிப்பன்மாளிகையில் நேற்று நடந்தது.
இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் பேசியதாவது: நகர்ப்புற தேர்தல் நடுநிலையுடனும், பாதுகாப்புடனும் நடைபெற வேண்டும். இதற்கு தேர்தல்அலுவலர்கள், தேர்தல் தொடர்பான அனைத்து விவரங்களையும் முழுமையாக அறிந்திருக்க வேண்டும். வாக்காளர் பட்டியல், வாக்குச்சாவடி பட்டியல் தயாரித்தல், தேர்தல் கண்காணிப்புப் பணிகள், தேர்தல் நடத்தை விதிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் குறித்த முக்கியப் பணிகளை முழுமையாக அறிந் திருக்க வேண்டும்.
எனவே, ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள 6 மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோர், இங்கு அளிக்கப்படும் பயிற்சிகளை முறையாக அறிந்துகொண்டு, சிறப்பாக தேர்தல் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, மாவட்ட தேர்தல்அலுவலர்களான மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், தங்கள் மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கினர்.