Published : 03 Nov 2021 03:08 AM
Last Updated : 03 Nov 2021 03:08 AM

2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் சதி அம்பலம்; மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கோர வேண்டும்: சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் வலியுறுத்தல்

2ஜி ஒதுக்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசை வீழ்த்த தீட்டப்பட்ட சதி அம்பலமாகியுள்ளதால் பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய கணக்கு தணிக்கை குழு (சிஏஜி) முன்னாள் தலைவர் வினோத் ராயும்மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2ஜி ஒதுக்கீட்டில் ரூ.1 லட்சத்து76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக ஆதாரமற்ற முறையில் அன்றைய சிஏஜி தலைவர் வினோத் ராய் கூறியிருந்தார். இதை பயன்படுத்தி பிரச்சாரம் செய்து 2014 தேர்தலில் பாஜக ஆட்சி அமைத்தது.

சிஏஜி அறிக்கையில் இருந்து அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் பெயரை நீக்குமாறு காங்கிரஸ் எம்.பி. சஞ்சய் நிருபம் அழுத்தம்கொடுத்ததாக தான் கூறிய குற்றச்சாட்டு தவறானது என்று கடந்தஅக்.18-ம் தேதி நீதிமன்றத்தில் வினோத் ராய் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார். இதன்மூலம் 2ஜி விவகாரத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிரானசதி வெளிப்பட்டுள்ளது.

வினோத் ராய் அளித்த சிஏஜி அறிக்கையின் அடிப்படையில்தான் அன்னா ஹசாரே, அர்விந்த் கேஜ்ரிவால், பாபா ராம்தேவ், கிரண் பேடி, வி.கே.சிங் உள்ளிட்டோரும், பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினரும் காங்கிரஸுக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டனர். மோடி பிரதமரானதும், வங்கித் தேர்வு வாரியத்தலைவராக வினோத் ராய் நியமிக்கப்பட்டார். வி.கே.சிங் மத்திய அமைச்சராக இருக்கிறார். கிரண்பேடி ஆளுநராக நியமிக்கப்பட்டார். மோடி ஆட்சிக்கு வந்ததும் அன்னா ஹசாரே அமைதியாகிவிட்டார். கேஜ்ரிவால் தனிக்கட்சி தொடங்கி டெல்லி முதல்வராகிவிட்டார். மோடி பிரதமராகிவிட்டார்.

ஆனால், இதில் இந்தியா தோற்றுவிட்டது. நாட்டின் வளர்ச்சி, சுதந்திரம், நாடாளுமன்ற ஜனநாயகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, நாட்டு மக்களிடம் பிரதமர் மோடியும், வினோத் ராயும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்.

இவ்வாறு சல்மான் குர்ஷித் கூறினார். இப்பேட்டியின்போது தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கே.வீ.தங்கபாலு, ஊடகப் பிரிவுமாநிலத் தலைவர் ஆ.கோபண்ணா, மாநில துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, பொதுச் செயலாளர் கே.சிரஞ்சீவி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

உ.பி. முதல்வர் வேட்பாளர் பிரியங்கா?

சல்மான் குர்ஷித் கூறும்போது, ‘‘உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக பிரியங்கா காந்தி அறிவிக்கப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான தொண்டர்கள், நிர்வாகிகளின் விருப்பம். ஆனால், இறுதி முடிவை பிரியங்காதான் எடுக்க வேண்டும். அவரது சுற்றுப்பயணமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தில் பிரியங்காவால் பெரும் அரசியல் மாற்றம் நிகழ்வது உறுதி. பஞ்சாபில் முதல்வர் மாற்றப்பட்டிருந்தாலும், வரும் தேர்தலில் காங்கிரஸ் கண்டிப்பாக வெற்றி பெறும்’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x