

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசைக் கண்டித்து 5 மாவட்ட தலைநகரங்களில் வரும் 9-ம் தேதி அதிமுக சார்பில்ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனஅக்கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கை:
திமுக ஆட்சி வரும்போதெல்லாம் மாநிலத்தின் அடிப்படை உரிமைகளை அடகு வைப்பதும், தங்களின் சுயநலனுக்காக தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை பலி கொடுப்பதும் தொடர்ந்து நடக்கிறது. தென் தமிழகத்தில் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய5 மாவட்ட மக்களின் விவசாய, குடிநீர் தேவைகளுக்கு ஆதாரமாக விளங்கும் வைகை ஆற்றில் ஓடிவருவது முல்லை பெரியாறு அணையின் நீர்தான்.
அணையில் 152 அடி தண்ணீர் தேக்கப்பட்டால்தான் 5 மாவட்ட மக்களின் விவசாயம், குடிநீர்தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். ஆனால், அணை குறித்துஉண்மைக்கு புறம்பான தகவல்களால் கேரள அரசு எழுப்பும் பிரச்சினைகளை திமுக அரசு கைகட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்க்கிறது. அணையின் நீர் இருப்பு 138 அடியைநெருங்கும் நேரத்திலேயே, கேரளஅமைச்சர்கள் மேற்பார்வையில் மதகுகள் திறக்கப்பட்டுள்ளன. இது அணை மீதான தமிழக அரசின் உரிமைகளை கேள்விக்குறியாக்கும் செயல்.
எனவே, 5 மாவட்ட குடிநீர், வேளாண் பாசனத் தேவைகள் மற்றும் மாநில உரிமையில் திமுகஅரசு காட்டும் ஏனோதானோ மனநிலையை கண்டித்து, அதிமுகசார்பில் 5 மாவட்ட தலைநகரங்களிலும் வரும் 9-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.