Published : 03 Nov 2021 03:08 AM
Last Updated : 03 Nov 2021 03:08 AM

சென்னை ராயப்பேட்டையில் உள்ள வீட்டில் பதிவுத் துறை தலைவர் மனைவி சடலம் மீட்பு: தற்கொலையா, கொலையா என போலீஸ் விசாரணை

சுமதி

சென்னை

தமிழக அரசின் பதிவுத் துறை தலைவர் மனைவி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள வீட்டில் கழுத்து அறுபட்ட நிலையில் இறந்துகிடந்தது தெரியவந்தது.

தமிழக அரசின் பதிவுத் துறை தலைவர் சிவனருள், ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் முதல் தளத்தில், குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி சுமதி(53). இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். மகளுக்குத் திருமணமாகி விட்டது. அவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் டாக்டராகப் பணியாற்றுகிறார். மகன் மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று காலை சிவனருள் வழக்கம்போல பணிக்குசென்று விட்டார். காலை 11.20 மணியளவில் அவரது வீட்டுக்குச் சென்ற பணிப்பெண், படுக்கை அறைகளை சுத்தம் செய்துள்ளார். இறுதியாக குளியலறை சென்றபோது, அங்கு சுமதி கழுத்து அறுபட்ட நிலையில் இறந்துகிடந்தது தெரியவந்தது. அருகில் ஒரு பிளேடு கிடந்துள்ளது.

அதிர்ச்சியடைந்த பணிப்பெண் உடனடியாக இதுகுறித்து சிவனருளுக்கு தெரிவித்தார். தகவலறிந்து வந்த ஐஸ்அவுஸ் போலீஸார் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமதி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா எனவிசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "சுமதி கடந்த 2 ஆண்டுகளாக மன அழுத்தத்துக்கு சிகிச்சை பெற்றுவந்துள்ளார். சிவனருள் வீட்டின் பூட்டு தானாகவே பூட்டிக்கொள்ளும் தன்மை கொண்டது. சாவி போட்டும் திறந்து கொள்ளலாம். அதன்படி, நேற்று காலை சுமதி தனது வீட்டின் சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்துவிட்டு, தனது வீட்டுக்குள் சென்று உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டுள்ளார்.

பிறகு அங்கு வந்த பணிப்பெண், பக்கத்து வீட்டில் கொடுக்கப்பட்ட சாவியை வழக்கம்போல பெற்று கதவை திறந்து பார்த்தபோது, குளியலறையில் சுமதி இறந்துகிடந்தது தெரியவந்துள்ளது. எனவே, சுமதி தற்கொலை செய்து கொண்டிருக்கஅதிக வாய்ப்பு உள்ளது. எனினும், அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறதுது" என்றனர்.

இதற்கிடையில், சுமதி எழுதிய கடிதம் ஒன்று சிக்கியதாகவும், அதில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாகவும், தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக போலீஸார் கூறினர். இதை சுமதிதான் எழுதினாரா என்ற கோணத்தில் விசாரிக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x