தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்குக: ராமதாஸ்

தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்குக: ராமதாஸ்
Updated on
1 min read

காஷ்மீர் மாநிலம் கார்கில் பகுதி பனிச்சரிவில் சிக்கி பலியான தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் விஜயகுமார் (23) குடும்பத்துக்கு அரசு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "காஷ்மீர் மாநிலம் கார்கில் பகுதியில் கடந்த 17 ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவில் சிக்கி நெல்லை மாவட்டம் வல்லராமபுரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் விஜயகுமார் வீரச்சாவு அடைந்தார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும், தாங்கிக் கொள்ள முடியாத துயரமும் அடைந்தேன்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டை பாதுகாப்பதற்காக தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் எந்த தியாகத்தையும் செய்வதற்கு தயாராக இருப்பார்கள் என்பதற்கு விஜயகுமாரின் வீரச்சாவு சிறந்த உதாரணம் ஆகும்.

கடந்த பிப்ரவரி மாதம் காஷ்மீர் மாநிலம் சியாச்சின் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் தமிழகத்தைச் சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் வீரச்சாவு அடைந்தனர். ஆபத்து நிறைந்த காஷ்மீர் எல்லையில் தமிழக வீரர்கள் அதிக எண்ணிக்கையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதும், ராணுவத்துக்கான ஆள் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்பதும் தமிழர்களின் தேசபற்றுக்கு எடுத்துக்காட்டு ஆகும்.

வீரமரணமடைந்த விஜயகுமார் தான் அவரது குடும்பத்திற்கு வருவாய் ஆதாரமாக இருந்தவர். அவரது மறைவால் அவர் குடும்பம் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகும். இதைக் கருத்தில் கொண்டு அவரது குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதி உதவியை தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

அதுமட்டுமின்றி, ஏற்கனவே பலமுறை நான் வலியுறுத்தியவாறு பணியின் போது வீரமரணமடைந்த தமிழக ராணுவ வீரர்களை போற்றும் வகையில் அவர்களுக்கு வேலூரில் நினைவுச்சின்னம் அமைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in