

சென்னை மாநகராட்சிப் பள்ளியில் சாதிவாரியாகப் பிரித்து மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு, தொடர்புடைய பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை எம்ஜிஆர் நகரில் மாநகராட்சி தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில், மாணவர்களை சாதிவாரியாகப் பிரித்து, வருகைப் பதிவேடு தயாரித்து, அதைப் பின்பற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சூழலில், கரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகு தமிழக அரசு அறிவித்த தளர்வுகளின் அடிப்படையில் நேற்று முன்தினம் இப்பள்ளி திறக்கப்பட்டது. வருகைப் பதிவேடு சாதிவாரியாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளதால், சுழற்சி முறையில் மாணவர்களும் சாதிவாரியாகப் பிரித்து வரவழைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ``தொடர்புடைய பள்ளியில் சாதிவாரியாக மாணவர்களைப் பிரித்து பள்ளிக்கு வரவழைத்தது தொடர்பாக விசாரணை நடத்தினோம். மாணவர்களை சாதிவாரியாகப் பிரிக்கக் கூடாது. வருகைப் பதிவேட்டில், அகர வரிசைப்படி பெயர்களை பதிவு செய்து, மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம்.
அதனடிப்படையில், தற்போது அகர வரிசையில் மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்படுகின்றனர். மேலும், இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் கேட்டு தொடர்புடைய பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அவரிடம் விளக்கம் கேட்கப்படும்.
விசாரணையில், சாதிவாரியாகப் பிரித்து மாணவர்களை வரவழைத்தது உறுதி செய்யப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.