மீனவர்கள் 64 பேருடன் 77 படகுகளை மீட்க நடவடிக்கை தேவை: மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

மீனவர்கள் 64 பேருடன் 77 படகுகளை மீட்க நடவடிக்கை தேவை: மோடிக்கு ஜெயலலிதா கடிதம்
Updated on
1 min read

தமிழக மீனவர்கள் நடுக்கடலில் கைது மற்றும் கடத்தப்படுவதை உடனடியாக தடுக்க வேண்டும். இலங்கை கடற்படை வசம் உள்ள 64 மீனவர்கள், 77 படகுகளை விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக இன்று பிரதமர் மோடிக்கு அவர் அனுப்பிய கடிதத்தில், ''தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொய்வின்றி நடந்து வருகிறது. கடந்த 6-ம் தேதி அதிகாலை ராமநாதபுரம், ராமேஸ்வரம் மீன்பிடித் தளத்தில் இருந்து 2 விசைப்படகுகளில் சென்ற 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கொண்டு சென்றுள்ளனர். அதே காலகட்டத்தில், தூத்துக்குடி மாவட்ட திரேஸ்புரம் மீன்பிடி தளத்தில் இருந்து இரண்டு விசைப்படகுகளில் சென்ற 15 மீனவர்கள் மற்றும் மோட்டார் பொருத்தப்பட்ட கட்டுமரத்தில் சென்ற 5 மீனவர்கள் என 20 பேரும் கைது செய்யப்பட்டு இலங்கையின் கல்பிட்டியவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இரண்டு சம்பவங்களிலும் 4 படகுகள் மற்றும் 29 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமது வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்துக்காக தமிழக கடலோர மாவட்ட மீனவர்கள் தங்கள் பாரம்பரிய பகுதியான பாக்ஜல சந்தியில் மீன்பிடித்து வருகின்றனர். இவர்கள் மீது விதிகளை மீறி இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்துவது, துன்புறுத்துவதுடன் கைது செய்தும் வருகிறது. தமிழக மீனவர்களை அதிகளவு கோபமுறச் செய்துவரும் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடாகும். மீனவர்களின் உரிமையை காக்க, கச்சத்தீவை இந்தியாவுடன் இணைத்து நாட்டின் இறையான்மையை பாதுகாக்க வேண்டும். இதற்காகவே, இந்தியா- இலங்கையிடையிலான கடல் எல்லை தொடர்பாகவும், இந்திய- இலங்கை ஒப்பந்தங்களுக்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மீனவர்களை விடுவிக்கும் இலங்கை அரசு, அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யும் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை திருப்பியளிப்பதில்லை என்ற நிலைப்பாடை கொண்டுள்ளது. இது மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. நீண்டகாலமாக பயன்பாடின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த படகுகள், பருவமழையால், மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மீன்பிடி படகுகள் மற்றும் உபகரணங்களை சீரமைத்து, பயன்படுத்தும் நிலைக்கு மத்திய அரசு விரைவில் கொண்டுவர வேண்டும்.

நமது மீனவர்கள் நடுக்கடலில் கைது செய்யப்படுவதும், கடத்தப்படுவதும் உடனடியாக தடுக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்தி, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நிரந்தர தீர்வு காண வேண்டும்.

எனவே இந்த விவகாரத்தில் தாங்கள் நேரடியாக தலையிட்டு, இந்த விவகாரத்தில் இலங்கை அதிகாரிகளுடன் பேசி, 64 மீனவர்கள் மற்றும் 77 படகுகளை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு உரிய உத்தரவுகளை வழங்க வேண்டும்'' என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in