Published : 02 Nov 2021 07:38 PM
Last Updated : 02 Nov 2021 07:38 PM

வெடி, மத்தாப்பு வடிவங்களில் சாக்லேட்: தொழில்முனைவோர் ஆன ஐ.டி. ஊழியர் அசத்தல்

தீபாவளியை முன்னிட்டு லட்சுமி வெடி, அணுகுண்டு, ராக்கெட், சங்கு சக்கரம், பூந்தொட்டி எனப் பல்வேறு பட்டாசு வடிவங்களில் சாக்லேட்களைச் செய்து அசத்தி வருகிறார் புவனாசுந்தரி. இவர் ஐ.டி. பணியை விட்டுவிட்டு சாக்லேட் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் புவனாசுந்தரி. பெங்களூருவில் ஐ.டி. கம்பெனியில் சாப்ட்வேர் இன்ஜினீயராகப் பணிபுரிந்த இவர், திருமணத்திற்குப் பிறகு திண்டுக்கல்லிலேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தனது நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவழிக்கத் தொழில்முனைவோராக மாற விரும்பியுள்ளார். இதற்காகப் பல்வேறு பயிற்சிகளில் பங்கேற்று, வீட்டில் இருந்தே தொழில் செய்ய ஏதுவான தொழிலைத் தேர்வு செய்தார். ஹோம் மேட் சாக்லேட்டை ரசாயனக் கலப்பு இன்றி சிறுவர்களைக் கவரும் வகையில் தயாரிக்க முடிவு செய்தார்.

முதலில் வீட்டளவில் செய்து, தங்களது உறவினர்களுக்கு விற்பனை செய்துள்ளார். பின்னர் நண்பர்கள் வட்டாரம் வரை விற்பனை நீண்டது. இதில் அதிக வரவேற்பைப் பெற்ற புவனா சுந்தரி, சாக்லேட் தயாரிப்பை விரிவுபடுத்த எண்ணி, ஒரே மாதிரி தயாரிக்காமல், சிறுவர்களைக் கவரும் வகையில் பல்வேறு வடிவங்களில் தயாரிக்க முடிவு செய்தார்.

தீபாவளியை முன்னிட்டு வெடி, சங்கு சக்கரம், துப்பாக்கி, பூந்தொட்டி, ராக்கெட், லட்சுமி வெடி, அணுகுண்டு ஆகிய வடிவங்களில் சாக்லேட் செய்து சிறுவர்களைக் கவர முயற்சி மேற்கொண்டார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வெடிகள் வடிவிலான சாக்லேட்களை ஆர்வமுடன் வாங்கிக் கொடுக்கின்றனர்.

இதுகுறித்து புவனாசுந்தரி கூறுகையில், ’’திருமணத்திற்குப் பிறகு வேலையை விட்டுவிட்டு வரவேண்டிய நிலை ஏற்பட்டது. வீட்டில் சும்மாவும் இருக்க முடியவில்லை. இதனால் ஏதேனும் தொழில் தொடங்கலாம் என்று யோசித்தபோது, எனது குழந்தைகளுக்கு வீட்டிலேயே எந்தவித பிரிசர்வேட்டிவ் இல்லாமல் சாக்லேட் தயாரித்துக் கொடுத்தேன். இதையே தொழிலாகச் செய்தால் என்ன எனத் தோன்றவே முதலில் உறவினர்கள் வட்டாரம், பின்னர் நான் பணிபுரிந்த இடத்தில் பழகிய நட்பு வட்டாரம் என சாக்லேட் செய்து விற்பனை செய்தோம்.

நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது எங்களது சாக்லேட்களை வாங்கியவர்கள் பலருக்கும் சொல்ல, விற்பனை அதிகரித்தது. தீபாவளிக்கு வித்தியாசமாகச் செய்யவேண்டும் என யோசித்ததில் உருவானதுதான், வெடிகள் வடிவிலான சாக்லேட்கள். சிறுவர்கள், பெற்றோர்களிடம் இத்தனை வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. எனது குழந்தைகளுக்குச் செய்து கொடுத்தது போலவே எந்தவித ரசாயனக் கலப்பும் இன்றி செய்து தருகிறேன். ஒரு மாதம் வரை இவை கெடாமல் இருக்கும்.

ஃபிரிட்ஜில் வைக்கத் தேவையில்லை. எங்கள் தயாரிப்பைக் கேள்விப்பட்டு வெளியூர்களில் இருந்து ஆர்டர்கள் வருகின்றன. கூரியர் மூலம் அனுப்பி வைக்கிறோம். பல்வேறு வடிவங்களில் ஆன ஒரு கிலோ சாக்லேட்டை ரூ.500 முதல் விற்பனை செய்கிறோம். எங்கள் முயற்சிக்கு வெற்றி கிடைத்தது என்றுதான் சொல்லவேண்டும். இந்த வெற்றியைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள மேலும் பல்வேறு வகைகளில் யோசிக்கிறோம்’’ என்று புவனாசுந்தரி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x