

தமிழக மக்களுக்கு தீபாவளிப் பரிசாக முதல்வர் நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளார். இதன்மூலம் அடகு வைக்கப்பட்ட நகைகள் அவரவர் வீட்டிற்கு வந்துவிடும் எனக் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ''தமிழக அரசு கடன் சுமையில் உள்ள நிலையிலும் கூட்டுறவுக் கடன்களைத் தள்ளுபடி செய்தது என்பது அரசின் சாதனையாகும். கூட்டுறவு நகைக் கடன் தள்ளுபடி மூலம் அவரவர் நகைகள் அவரவர் வீட்டிற்கு வந்துவிடும். இதுதான் தமிழக முதல்வர் மக்களுக்குத் தந்த தீபாவளிப் பரிசு.
கொடைக்கானலில் கூட்டுறவு சங்கங்கள் பற்றி முழுவதுமாக அறிந்துகொள்ளும் வகையில் கூட்டுறவுப் பயிற்சிக் கல்லூரி அமையவுள்ளது. இதற்குத் தமிழக முதல்வர் ஒப்புதல் வழங்கியுள்ளார். அனைத்துப் பகுதியினரும் வந்து முழுமையாகக் கூட்டுறவு குறித்துக் கற்கும் வகையில் கூட்டுறவுப் பயிற்சிக் கல்லூரி செயல்படவுள்ளது. இந்த ஆண்டே மாணவர்கள் சேர்க்கைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
முல்லைப் பெரியாறு அணை உரிமையைத் தமிழக அரசு விட்டுத் தரவில்லை. இதுபற்றி நீர்வளத்துறை அமைச்சர் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார். இரு தினங்களில் முல்லைப் பெரியாறு அணையை நேரில் பார்வையிட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வரவுள்ளார். அவருடன் சேர்ந்து நானும் செல்கிறேன்.
கூட்டுறவு நகைக் கடன்களில் முறைகேடு செய்தவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கான பயிர்க் கடன் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது'' என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.