

புதூர் வட்டாரத்தில் தொடர்ந்து பெய்த பலத்த மழையால் அயன் வடமலாபுரம் கிராமத்தில் 600 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கின.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டு ராபி பருவத்தையொட்டி புரட்டாசி மாதத்தில் உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், வெங்காயம், மிளகாய் போன்ற பல்வேறு பயிர்களை விவசாயிகள் பயிரிட்டனர். புரட்டாசி மாதம் பருவமழையை எதிர்பார்த்து விவசாயப் பணியில் ஈடுபட்டு வந்தனர். தொடக்கத்தில் ஓரளவு ஈரப்பதத்தில் சில கிராமங்களில் பயிர்கள் முளைத்தன. ஆனால், தொடர்ந்து மழையில்லாமல் போகவே, அந்தப் பயிர்கள் கருகின. கடந்த ஒரு மாதத்துக்கு முன் விவசாயிகள் மீண்டும் நிலத்தை உழுது, விதைப்புப் பணியில் ஈடுபட்டனர். மீண்டும் மழை கைவிடவே, 3-வது முறையாக உழுது விதைத்துள்ளனர்.
இந்நிலையில், வடகிழக்குப் பருவமழை கடந்த ஒரு வார காலமாகப் பெய்து வருகிறது. இதில், நேற்று இரவு முதல் நாகலாபுரம், ரெகுராமபுரம், கீழக்கரந்தை, வெளவால் தொத்தி, புதுப்பட்டி, அயன் வடமலாபுரம், அச்சங்குளம் போன்ற கிராமங்களில் தொடர்ச்சியாக மழை பெய்தது. இதனால் கிராமங்களில் உள்ள குளம், குட்டை, ஊருணி உள்ளிட்ட நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இந்நிலையில் அயன் வடமலாபுரம் கிராமத்தில் சுமார் 600 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம், வெள்ளைச் சோளம், கம்பு, குதிரைவாலி, உளுந்து, பாசி செடிகள் மழை நீரில் மூழ்கின. ஏற்கெனவே இரண்டு அழித்து விதைப்பு செய்து மருந்து தெளித்து, களையெடுத்து ஒரு அடி உயரத்துக்கு வளர்ந்த பயிர்கள் 2 நாட்களாகத் தண்ணீரில் மூழ்கி அழுகிவிட்டன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் அ.வரதராஜன் கூறும்போது, ''வடகிழக்குப் பருவமழை கடந்த சில ஆண்டுகளாக ஒன்று பெய்து கெடுக்கிறது. இல்லையென்றால் பெய்யாமல் கெடுக்கிறது. கடந்த ஆண்டு பெய்த தொடர் மழையால் கடும் சேதம் ஏற்பட்டு விளைச்சல் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு அதனை ஈடுகட்டிவிடலாம் என்று எண்ணியிருந்தோம். ஆனால், 2 நாட்கள் பெய்த மழையில் பயிர்கள் அழுகிவிட்டன. ஒரு முறை விதைப்பு செய்ய ரூ.6000 செலவாகிறது. ஏற்கெனவே இருமுறை விதைப்பு செய்து மழையில்லாததால், அவை கருகி, தற்போது 3-வது முறையாக விதைப்பு செய்துள்ளோம். எனவே பாதிக்கப்பட்ட பயிர்களைக் கணக்கெடுப்பு செய்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்” என்றார்.