தொடர் மழை காரணமாக வரத்து இல்லை: ஒரு கிலோ மல்லிகை விலை ரூ.1,000 முதல் ரூ.1,200 வரை விற்பனை

தொடர் மழை காரணமாக வரத்து இல்லை: ஒரு கிலோ மல்லிகை விலை ரூ.1,000 முதல் ரூ.1,200 வரை விற்பனை
Updated on
1 min read

தொடர் மழை காரணமாக மல்லிகை விளைச்சல் இன்றி, வரத்தும் இல்லாமல் போய்விட்டது. இதனால் திருச்சியில் ஒரு கிலோ மல்லிகை விலை ரூ.1000க்கு விற்பனையானது.

திருச்சி மார்க்கெட்டுகளில் இன்று பூக்களின் விலை அதிகமாக உயர்ந்திருந்தது. இந்த விலை உயர்வு நாளை இரவு வரை இருக்கும் என்கின்றனர் பூ வியாபாரிகள்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று கிறிஸ்தவர்களால் கல்லறைத் திருநாள் கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் தீபாவளி பண்டிகையும் வரவுள்ளது.

இதனால், மார்க்கெட்டுகளில் 4 நாட்களுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் இன்று பூக்களின் விலை மிக அதிகமாக உயர்ந்திருந்தது. காந்தி மார்க்கெட் உட்பட முக்கிய பூ மார்க்கெட்டுகள் மட்டுமின்றி சில்லறை வியாபாரிகளிடத்திலும் பூ விலை மிக அதிகமாகவே இருந்தது. குறிப்பாக, தொடர் மழை காரணமாக மல்லிகை விளைச்சல் இன்றி, வரத்தும் இல்லாமல் போய்விட்டது. இதனால், கடந்த 4 நாட்களுக்கு முன் கிலோ மல்லிகை ரூ.100 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்றிலிருந்து ரூ.1000 முதல் ரூ.1,200 வரை விற்பனையானது.

குறிப்பாக, கிறிஸ்தவர்களால் கல்லறைத் திருநாள் கடைப்பிடிக்கப்பட்டதால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லறைகளைச் சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகப் பூக்கடைகளிலும் பூக்கள் விலை அதிகமாக இருந்தது.

இது தொடர்பாக காந்தி மார்க்கெட் பூ வியாபாரி ஆர்.பார்த்திபன் கூறுகையில், ''பண்டிகைக் காலங்களில் பூக்கள் விலை கணிசமாக உயர்ந்திருக்கும். இதன்படி, கல்லறைத் திருநாள் மற்றும் தீபாவளி பண்டிகை ஆகியவற்றையொட்டி பூக்கள் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக, தொடர் மழையால் மல்லிகை வரத்து இல்லாததால், ஏற்கெனவே வரப்பெற்ற மல்லிகை ஒரு கிலோ ரூ.1,000 முதல் ரூ.1,200 வரை விற்பனையானது.

இதேபோல், 4 நாட்களுக்கு முன் ரூ.200-க்கு விற்கப்பட்ட முல்லைப் பூ நேற்றிலிருந்து ரூ.800-க்கும், சம்பங்கிப் பூ ரூ.10-லிருந்து ரூ.50-க்கும், ரூ.10, ரூ.20 என்ற விலையில் இருந்த செவ்வந்தி ரூ.80, ரூ.100, ரூ.120-க்கும் ஜாதிப் பூ ரூ.200-லிருந்து ரூ.600-க்கும், விச்சிப் பூ ரூ.40 முதல் ரூ.60 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. மழை காரணமாக அவ்வப்போது இடையூறு நேரிட்டாலும், பூக்கள் விற்பனை நன்றாக உள்ளது. இந்த விலை உயர்வு நாளை மறுநாள் நள்ளிரவு வரை இருக்கும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in