Published : 02 Nov 2021 04:30 PM
Last Updated : 02 Nov 2021 04:30 PM

ஊரக வேலைத் திட்டத்துக்கு உடனே நிலுவைத் தொகையை வழங்கிடுக: மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்

நிதியின்றி தவிக்கும் ஊரக வேலைத் திட்டத்துக்கு உடனே நிலுவைத் தொகையை வழங்கிடுமாறு மத்திய கிராமப் புற மேம்பாடு மற்றும் வளர்ச்சி அமைச்சர் கிரிராஜ் சிங்குக்கு மதுரை மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம் வருமாறு:

மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டம் நாடு முழுக்க நிதியின்றித் தவிக்கிறது. 21 மாநிலங்களில் மத்திய அரசு அனுப்பிய நிதி தீர்ந்து விட்டது.

15 கோடி மக்களுக்கு பசி தீர்க்கும் திட்டம் இது. கோவிட் காலத்தில் வாழ வழியின்றி சொந்த கிராமங்களுக்கு திரும்பிய மாநகர உழைப்பாளிகள் இன்னும் திரும்பி வரவில்லை. இதனால் ஊரக வேலைத் திட்டத்தையே அவர்கள் சார்ந்து இருக்க வேண்டியுள்ளது.

ஏற்கெனவே இத் திட்டத்திற்கு ஒதுக்குகிற பட்ஜெட் தொகை போதுமான அளவில் இல்லை. கடந்த ஆண்டு 1.11 லட்சம் கோடி ரூபாய் செலவான நிலையில் இவ்வாண்டு பட்ஜெட்டில் 73000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. அப்போதே இடதுசாரிக் கட்சிகள் சுட்டிக் காட்டியும் அரசு செவி சாய்க்கவில்லை. அதன் விளைவே தற்போதைய நிதி நெருக்கடி. நாடு முழுக்க கண்டனக் குரல்கள் எழுந்த பின்புலத்தில் கூடுதல் ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற செய்திகள் வந்துள்ளன.

தமிழக முதல்வர் நேற்று கடிதம் எழுதி இருக்கிறார். தமிழ் நாட்டிற்கு ஒன்றிய அரசு தந்த ரூ 3524.69 கோடி செப்டம்பர் 15, 2021 அன்றே தீர்ந்து விட்டது. அதற்கு பிறகு ரூ 1178.12 கோடி நவம்பர் 1 வரை மேற்கொண்ட பணிகளுக்கான செலவினம் ரூ 1178.42 கோடி. அதற்கான நிதி உடனே தேவைப்படுகிறது. இதே நிலை நீடித்தால் வந்ததை விட இன்னும் அதிகமான மக்கள் நகரங்களை நோக்கி நகர்வார்கள் என்று முதல்வர் கூறி இருப்பது முற்றிலும் சரி. அது மிகப் பெரும் சமூகப் பிரச்சினையாக மாறும்.

இன்னும் நிதியாண்டு முடிய ஐந்து மாதங்கள் உள்ளன. இத்திட்டத்திற்கான நிதித் தேவையை மறு கணக்கீடு செய்யுங்கள். ஏற்கெனவே விழுந்துள்ள பள்ளம், இன்னும் எஞ்சி இருக்கிற மாதங்களுக்கான தேவைகளை கணக்கிற் கொண்டு கூடுதல் தொகைகளை உடன் அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x