

தமிழகத்தில் கோயில் தங்க நகைகளை உருக்கிக் கட்டிகளாக மாற்றும் திட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனு, சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றப்பட்டது.
தூத்துக்குடியைச் சேர்ந்த பாலமுருகன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
''தமிழகத்தில் அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில்களில் பக்தர்கள் நேர்த்திக் கடனாக வழங்கிய 2,000 கிலோ தங்க நகைகள் உள்ளன. இவற்றை உருக்கி, தங்கக் கட்டிகளாக மாற்றி, வங்கிகளில் அடமானம் வைக்கப்படும், இதனால் கிடைக்கும் வருமானம் கோயில் திருப்பணிக்குப் பயன்படுத்தப்படும் என்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கோயில் நகைகளை எக்காரணம் கொண்டும் வேறு காரணங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது. இதனால் நகைகளை தானமாக வழங்கிய பக்தர்களின் உணர்வுகள் பாதிக்கப்படும். கோயில் நகைகளைப் பாதுகாப்பது மற்றும் தேவைப்படும் நகைகளை உருக்கிக் கட்டிகளாக மாற்றுவது என்பது கோயில் அறங்காவல் குழுவின் உரிமை.
அறங்காவல் குழுவின் உரிமையை அரசு எடுத்துக்கொள்வதுபோல் அமைச்சரின் அறிவிப்பு அமைந்துள்ளது. எனவே, கோயில் தங்க நகைகளை உருக்கி, தங்கக் கட்டிகளாக மாற்றும் தமிழக அரசின் திட்டத்துக்குத் தடை விதித்து உத்தரவிட வேண்டும்''.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அரசுத் தரப்பில், இதே கோரிக்கையுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு முன்பு பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனர்.