நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: சென்னை வானிலை ஆய்வு மையம்

நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: சென்னை வானிலை ஆய்வு மையம்

Published on

கனமழை காரணமாகத் தமிழகத்தில் நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “குமரிக் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு நோக்கி, அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிக்கு நகரக்கூடும். மேலும், இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியில் இருந்து தெற்கு ஆந்திரா வரை நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை நீடிக்கும். இதன் காரணமாக இந்த நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிபேட்டை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும்.

சென்னையைப் பொறுத்தவரை 48 மணி நேரத்துக்கு மேகமூட்டத்துடன் வானம் காணப்படும். நகரின் சில பகுதிகளில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்யும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in