

எல்லை போராட்ட தியாகிகள் 110பேருக்கு தலா ரூ.1 லட்சம் பொற்கிழிவழங்கப்படுகிறது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் 14 பேருக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலை மற்றும் நினைவுப் பரிசை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி, இப்பணியை தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாடு விடுதலை பெற்ற பின், 1956-ம் ஆண்டு நவ.1-ம் தேதி நாடுமுழுவதும் மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டன. அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவின் சில பகுதிகள் பிரிந்து சென்றன. அவ்வாறு பிரிந்தபோது, தமிழர்கள் அதிகம் வாழும்பகுதிகளை மீண்டும் தமிழகத்துடன் இணைக்க நடந்த போராட்டங்களில் பலர் ஈடுபட்டு உயிர்நீத்தும், சிறை சென்றும் தியாகம் செய்துள் ளனர்.
போராட்டங்களில் ஈடுபட்டு, தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் வகையில், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1-ம் நாளை எல்லைப் போராட்ட தியாகிகள் நாளாக தமிழக அரசுஅனுசரிக்கிறது.
சிறை சென்ற தியாகிகள்
எல்லை போராட்டங்களில் நேரடியாக ஈடுபட்டு சிறை சென்று தியாகம் செய்து, தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் எல்லைக் காவலர்கள் 110 பேருக்கு சிறப்பு நேர்வாக ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சம் பொற்கிழி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் 110 எல்லைப் போராட்ட தியாகிகளில், 14 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை, நினைவுப் பரிசை வழங்கி சிறப் பித்தார். மற்ற எல்லை பேராட்ட தியாகிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் வாயிலாக பொற்கிழி வழங்கப்படும்.
இந்நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, தமிழ் வளர்ச்சித் துறை செயலர் மகேசன் காசிராஜன், செய்தித்துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் செ.சரவணன் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.
இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.