

இந்த ஆண்டு தீபாவளி அன்று பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். காலை 6 மணிமுதல் 7 மணி வரை, இரவு 7 முதல்8 மணி வரை என 2 மணி நேரம்மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படும் என்று சுற்றுச்சூழல், வனத் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக துறை செயலர் சுப்ரியா சாஹூ வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிப்பதன் மூலம் மனிதர்கள், விலங்குகளின் உடல்நலனுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், ‘மாசுவை குறைக்கும் பட்டாசுகளை மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும். வருங்காலத்தில் பசுமைப் பட்டாசுகளை மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும்’ என கடந்த 2018-ல் தீர்ப்பளிக்கப்பட்டது. மற்றொரு வழக்கிலும் சில நாட்களுக்கு முன்பு இதே தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றம், பேரியம் ரசாயனப் பொருள் கலந்த பட்டாசு, சர வெடிகளை தயாரிக்கவும், வெடிக்கவும் தடை விதித்துள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் விதமாக தமிழகஅரசு, கடந்த 2018 முதல் தீபாவளி அன்று காலை 6 முதல் 7 மணி வரை,இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமேபட்டாசு வெடிக்க அனுமதித்து வருகிறது. இந்த ஆண்டு தீபாவளிஅன்றும் அதே நேரத்தில் பசுமைப் பட்டாசுகளை மட்டும் வெடிக்க அனுமதிக்கப்படும்.
எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தீபாவளி அன்று பசுமைப் பட்டாசுகளை மட்டும் காலை 6 முதல் 7 மணி வரை, இரவு 7 முதல்8 மணி வரை வெடிக்க வேண்டும்.அதிக சத்தம் ஏற்படுத்தும் சரவெடிகளை வெடிக்கக் கூடாது.அமைதி பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள், மத வழிபாட்டு தலங்கள், குடிசைப் பகுதிகள் அருகே பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். இயற்கை, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாததீபாவளியை மக்கள் கொண்டாட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.