

தஞ்சாவூரில் நேற்று சசிகலா தனது ஆதரவாளர்களை சந்தித்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதிமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் யாரும் வராததால் அவர் அதிருப்தியடைந்ததாக கூறப்படுகிறது.
சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்துக்குப் பிறகு, அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகளிடையே பல்வேறு கருத்துகள் எழுந்தன. ஆனால், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி சசிகலாவை அதிமுகவில் சேர்க்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளார்.
இந்நிலையில், அக்.26-ம் தேதி தஞ்சாவூருக்கு வந்த சசிகலா, மறுநாள் (அக்.27) தினகரன் மகள்திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்டார். அங்கு 10 நிமிடம் மட்டுமே மேடையில் இருந்துவிட்டு, அவர் புறப்பட்டுச் சென்றார்.
தொடர்ந்து, அக்.29-ல் பசும்பொன் சென்று முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி விட்டு, மீண்டும் தஞ்சாவூரில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பினார்.
இந்நிலையில், தஞ்சாவூரில் நேற்று சசிகலா தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி விட்டு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக கூறப்பட்டது.
ஆனால், ஆலோசனைக் கூட்டத்தை நடத்தாமல், நேற்று மதியம் 2 மணிக்கு தனது ஆதரவாளர்களை வீட்டுக்கு வரவழைத்தார். அவர்களுடன் 2 நிமிடம் பேசிய பின்னர், புகைப்படம் எடுத்துக்கொண்டு அனுப்பி வைத்துவிட்டார்.
தன்னை சந்திக்க அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நபர்கள் வருவார்கள் என சசிகலா எதிர்பார்த்திருந்த நிலையில், உள்ளூர் அதிமுக நிர்வாகிகள் கூட வராததால், அவர் அதிருப்தியடைந்ததாக கூறப்படுகிறது.
இன்று (நவ.2) மற்றும் நவ.5-ல் இதேபோல ஆதரவாளர்களை தனது வீட்டிலேயே சந்திக்க சசிகலா திட்டமிட்டுள்ளதாகவும், அதன் பிறகு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்வார் என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறினர்.