

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் அத்துமீறலை கண்டித்தும் திமுக அரசு அலட்சியமாக செயல்படுவதாக கண்டனம் தெரிவித்தும் இந்த அணையால் பயன்பெறும் 5 மாவட்டங்களில் அதிமுக சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் நேற்று மாலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், செல்லூர் ராஜூ , ஆர்.பி. உதயகுமார் மற்றும் மாவட்ட செயலர்கள் விவி.ராஜன் செல்லப்பா (மதுரை புறநகர் கிழக்கு), பிஆர்.செந்தில்நாதன் (சிவகங்கை), எம்.ஏ.முனியசாமி (ராமநாதபுரம்) மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்ற அவசர ஆலோனை நடைபெற்றது.
கூட்டத்தில் அதிமுக ஆட்சியில் மீட்கப்பட்ட முல்லைப் பெரியாறு அணை உரிமையை திமுக அரசு பறிகொடுத்துள்ளதாகவும் அதை மீட்டெடுக்க அதிமுக தொடர் போராட்டங்களை நடத்த முடிவெடுத்துள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கூட்டத்துக்குப் பின் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது; ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை மிகப்பெரிய சட்டப் போராட்டம் நடத்தி 136 அடியிலிருந்து முதல்கட்டமாக 142 அடியாக உயர்த்த உத்தரவு பெற்றுத் தந்தார். அதன் தொடர்ச்சியாக அந்த ஆண்டே முல்லைப் பெரியாறு நீர்மட்டம் 142 அடியாக நிலை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து 3 முறை நீர்மட்டத்தை நிலை நிறுத்தியது அதிமுக ஆட்சி.
ஆனால், இன்றைக்கு நிலைமை தலைகீழாக மாறி உள்ளது. தமிழக அரசு 142 அடியை தேக்குவதற்கு இன்றைக்கு பல்வேறு இடையூறுகளை கேரள அரசு ஏற்படுத்தியிருக்கிறது. அதைக் கண்டும் காணாமல் இருப்பது போல் தமிழக அரசின் நிலைப்பாடு உள்ளது. இதை தமிழக மக்களுக்கு நினைவுப்படுத்தவும் 5 மாவட்ட மக்களின் ஜீவாதார உரிமையை உறுதிப்படுத்துவதற்கும், அதிமுக சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் 5 மாவட்டங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியுடன் கலந்து பேசி அதற்குரிய தேதி, இடம், பங்கேற்போர் குறித்து அறிவிக்கப்படும். ஜீவாதார உரிமைகளை காக்கும் ஒரே இயக்கம், ஒரே அரசு அதிமுக மட்டுமே என்பதை முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மட்டுமில்லாது பல்வேறு பிரச்சினைகளில் நிரூபித்துள்ளோம் என்றார்.