

டிப்ளமோ படிப்பை தமிழ் வழியில் பயின்றும் அதற்கான சான்றிதழ் கிடைக்காததால் மின்வாரியத்தில் வேலைக்கு விண்ணப்பிக்க முடியவில்லை என வாசகர் ஒருவர் உங்கள் குரலில் புகார் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னை கிண்டியைச் சேர்ந்த கோ.பார்த்திபன் என்பவர் ‘தி இந்து - உங்கள் குரல்’ தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு கூறியதாவது:
நான் வேலூரில் உள்ள தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 2005-ம் ஆண்டு எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பாடப் பிரிவில் டிப்ளமோ பட்டம் பெற்றேன். இப்படிப்பை தமிழ் வழியில் பயின்றேன். இந்நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில், தமிழில் பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு இடஒதுக்கீடு 20 சதவீதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எனக்கு கல்லூரியில் அளித்த பட்டயச் சான்றிதழில் நான் தமிழ் வழியில் படித்ததாக குறிப்பிடப்படவில்லை. அக்கல்லூரியில் சென்று கேட்டதற்கு அவர்கள் தமிழில் படித்தது போல் சான்றிதழ் தர மறுத்து விட்டனர்.
இதுதொடர்பாக சென்னையில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்தில் சென்று கேட்டபோது அவர்களும் தமிழில் படித்ததற் கான சான்றிதழ் தர மறுக்கின்றனர். இதனால், தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள பணிக்கு என்னால் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு பார்த்திபன் கூறினார்.
இதுகுறித்து, தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்தில் விசாரித்தபோது, கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் டிப்ளமோ படிப்பில் சேரும் மாணவர்களுக்கு அரசு தமிழ்வழிக் கல்வியில் தேர்வு எழுத அனுமதி அளித்தது. ஆனால், அதற்காக அவர்கள் தமிழ் வழியில் பயின்றதற்காக சான்றிதழ் அளிப்பது குறித்து அரசாணையில் குறிப்பிடப்படவில்லை’’ என்றனர்.