

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வின் நேர்காணல் அல்லாத பணிகளில் உள்ள 48 காலியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு மார்ச் 17, 18-ம் தேதிகளில் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
டிஎன்பிஎஸ்சி குரூப்-2 (நேர்காணல் அல்லாத பணிகள்) பதவிகளில் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு, கடந்த 29.6.2014 அன்று எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. தேர்வின் முடிவு 12.12.2014 அன்று வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, 2 கட்டங்களாக சான்றி தழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில், 41 உதவி யாளர் 7 நேர்முக எழுத்தர் ஆகிய 48 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக 3-வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு மார்ச் 17, 18-ம் தேதி ஆகிய 2 நாட்களில் நடைபெறுகிறது.
சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் தரவரிசை அடங்கிய தற்காலிகப் பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் இ-மெயில் மூலமாகவும், விரைவஞ்சல் மூலமும் தனித்தனியாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள், அவர்கள் பெற்ற மதிப்பெண்கள், தரவரிசை, இடஒதுக்கீடு, நிலவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அனு மதிக்கப்படுவர். எனவே சான்றிதழ் சரி பார்ப்புக்கு அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி கூற இயலாது. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு வரத் தவறும் விண்ணப் பதாரர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.