

முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தசமையல்காரர் கைது செய்யப்பட்டார்.
தமிழக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அண்மையில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், "தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்துக்கு வெடிகுண்டு வைத்துள்ளேன். அடுத்த சில நிமிடங்களில் அது வெடித்துச் சிதறும். முடிந்தால் தடுத்துப் பாருங்கள்" என்று கூறிவிட்டு, இணைப்பைத் துண்டித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார், உடனடியாக இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தேனாம்பேட்டை போலீஸார், சைபர் க்ரைம்போலீஸார் உதவியுடன் விசாரணை நடத்தினர். இதில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழனிவேல் (40), வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீஸார் அவரை கைது செய்து, சென்னைக்கு அழைத்துவந்து விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "பழனிவேல் மாம்பாக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சமையலராகப் பணியாற்றி வருகிறார். 15 நாட்களுக்கு முன்புதான் வேலைக்கு சேர்ந்துள்ளார். 7-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர், மது அருந்தும் பழக்கம் உடையவர். தான் திமுக அனுதாபி என்றும் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படங்களில் ஏதாவது ஒரு படத்தில் பாட்டு பாட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
முதல்வர், உதயநிதி ஸ்டாலினின் அறிமுகம் கிடைப்பதற்காக, வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். அதன் மூலம் பிரபலமாகி, உதயநிதி ஸ்டாலின் படத்தில் பாடவாய்ப்புக் கிடைக்கலாம் எனக் கருதி, வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக பழனிவேல் தெரிவித்தார்" என்றனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.