Published : 01 Nov 2021 10:24 PM
Last Updated : 01 Nov 2021 10:24 PM

தமிழ்நாடு நாள்; ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்வினை எல்லாம் அங்கலாய்ப்புகளின் மொத்த வடிவம்: தங்கம் தென்னரசு பதிலடி

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஜூணல 18ம் நாளை தமிழ்நாடு நாளாகக் கொண்டாடும் முதல்வரின் அறிவிப்புக்கு தான் எதிர்வினை ஆற்றுவதாகக் கருதி அங்கலாய்ப்புகளின் மொத்த வடிவம் என அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஜூலை 18 ஆம் நாளை தமிழ்நாடு நாளாகக் கொண்டாடும் முதல்வரின் அறிவிப்புக்கு தான் எதிர்வினை ஆற்றுவதாகக் கருதி அங்கலாய்ப்புகளின் மொத்த வடிவமாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியின் ஒருமித்த வெளிப்பாடாக முந்தைய கழக ஆட்சியில் கொண்டுவர மக்கள் நலத்திட்டங்களைக் கடந்த பத்தாண்டுகளாக அதிமுக ஆட்சி படுகுழியில் தள்ளும்போதெல்லாம் அருகிலிருந்து ரசித்துக் கொண்டிருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி குறித்த ஞானோதயம் திடீரென்று பீறிட்டு எழுவதைப் பார்க்கும்போது வியப்பு மேலிடத்தான்
செய்கின்றது.

அண்ணாவால் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்டு; சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றப்பட்டு; அன்றைய மெட்ராஸ் மாகாணம்
தமிழ்நாடு எனும் தனிப்பெரும் பெயர் தாங்கி மலர்ந்த நாளே தமிழ்நாடு நாளாக அமைவது பொருத்தமாக இருக்கும் எனத்
தமிழறிஞர்களும், தமிழ் உணர்வாளர்களும், தமிழ் அமைப்புகளும் ஒன்று சேர்ந்து தமிழ்நாடு முதல்வரை வேஎண்டிய பொழுது, அவர்தம் கோரிக்கையில் புதைந்துள்ள நியாயத்தினையும், கடந்த ஆட்சியில் திட்டமிட்டு புனையப்பட்ட வரலாற்றுத் திரிப்பையும் சரி செய்யும் நோக்கிலேயே தமிழ்நாடு நாளாக ஜூலை 18 ஆம் நாள் அமையும் என்ற அறிவிப்பினை முதல்வர் செய்தார்.

அதே வேளையில் நவம்பர் திங்கள் 1 ஆம் நாள் எல்லைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாக சீலர்களைக் கவுரவிக்கும் நாளாகத் தொடர்ந்து செயல்படுத்தப்படும் எனவும் அறிவித்தார்.

1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் நாள் மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்டது. ஆயினும் தமிழகம் முழு உருவம் பெறவில்லை என்பதே அண்ணாவின் நிலைப்பாடாக இருந்தது. தமிழர் பகுதிகள் ஆந்திராவுக்கும், கேரளாவுக்கும் பிரிக்கப்பட்டு போனதை கண்டித்து இது ஜனநாயகத்திற்கு புறம்பான முடிவு என்ற தீர்மானம் திருச்சியில் நடைபெற்ற திமுக இரண்டாவது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
1957ல் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் தமிழ்நாடு எனும் தனித் தலைப்பில் திமுக நிலைப்பாடாக தேவிகுளாம் பீர்மேடு, திருத்தணி போன்ற பகுதிகள் தமிழகத்துடன் இணைக்கப்பட வேண்டும் எனவும் சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு எனப் பெயரிடப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறாக மொழிவாரி மாகாணம் அமைக்கப்பட்டதாக சொன்னாலும் தமிழர் வாழும் அனைத்துப் பகுதிகளும் தமிழ்நாட்டிற்கு கிடைக்கவில்லை. எல்லையோர கிராமங்கள் குறித்த பிரச்சினைகளை 1960ஆம் ஆண்டு வாக்கில் தான் முடிவுக்கு வந்தன. அப்போதும் தமிழ்நாடு என்ற பெயர் வைக்கப்படவில்லை.

1957ல் அன்பழகனார் தமிழ்நாடு என்று அமைய சட்டப்பேரவையில் சண்டமாருதமாக வாதிட்டார். 1960ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 8ம் நாள் சட்டப்பேரவையில் உரைவாற்றிய கருணாநிதி தமிழ்நாடு எனப் பெயரிடுவதற்கு சங்கரலிங்கனாரின் உயிர் மட்டுமல்ல எத்தனை உயிர்களை வேண்டுமானாலும் தரத் தயாராக இருக்கிறோம் என உணர்ச்சி பொங்க உரையாற்றினார்.

அனைவரின் கனவும் நனவாக அண்ணா முதல்வராக வரவேண்டி இருந்தது. 18.7.1967 தமிழக வரலாற்றின் பொன்னாள். தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என அண்ணா தனித்துவம் அளித்த நாள்.

ஆனால், உணர்வூட்டி ஆளாக்கி வளர்த்த அண்ணாவால் அமைக்கப்பெற்ற நாளினை தமிழ்நாடு நாள் எனக் கொண்டாடக் கூடாது என அவரது பெயரில் கட்சி நடத்திக் கொண்டிருப்பவர்கள் கூக்குரலிடுவது வெட்கக் கேடானது..

அண்ணாவின் பெயர் தாங்கிய உலகத் தரம் வாய்ந்த நூலகத்தை சிதைக்க நினைத்தவர்கள் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தை கருணாநிதி நிர்மானித்தார் என்ற ஒரே காரணத்துக்காக மாற்றி அமைத்தவர்கள், சமச்சீர் கல்வியை சீர்குலைக்க முனைந்து திருவள்ளுவரின் படத்தையே ஸ்டிக்கர் போட்டு மறைத்து பலகோடி பெறுமான பாடப்புத்தகங்களை பாழடித்தவர்கள் இன்றைக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி பற்றி பாடம் எடுக்க முனைவது கண்டிக்கத்தக்கது என்று தமிழக மக்கள் கருதுகிறார்கள்.

முதல்வரின் செயல்பாட்டை கட்சிப் பேதமின்றி அனைவரும் மனம் திறந்து பாராட்டி வருகின்றனர். காந்தாரி மனம் கொண்ட சிலருக்கு வேண்டுமானால் வேண்டாத மருமகள் கைப்பட்டால் குற்றம் போல் இட்டுக்கட்டி சொல்ல வேண்டிய தேவைகள் இருக்கலாம். ஆனால் தமிழ்நாடும் தமிழ் கூறும் நல்லுலகமும் ஜூலை 18 ஆம் தேதி தமிழ் வரலாற்றில் இடம் பெற்ற நாள் மட்டும் அல்ல. தமிழ்நாட்டின் வரலாற்று நாள் அதுவே என்று பெருமிதம் கொள்கின்றன என்பது தான் உண்மை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x