

வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்களை நடத்தி மிகப்பெரிய அளவில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தி தமிழக முதல்வர் சாதனை புரிந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
''2020ஆம் ஆண்டு மார்ச் 24 அன்று தொடங்கி 600 நாட்கள் தமிழகத்தில் உள்ள மாணவர்கள் கரோனா பெருந்தொற்றால் கல்வி கற்க இயலாத சூழ்நிலையில் மிகப்பெரிய அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் முழு ஊரடங்கினால் பாதிக்கப்பட்டு இருந்தனர். தமிழக முதல்வரின் சிறப்பான நடவடிக்கைகளால் ஐந்து மாத காலமாக கரோனா பேரிடரில் இருந்து மக்களை மீட்க, தொடர்ந்து தடுப்பூசிகள் செலுத்தி இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்கி, வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்களை நடத்தி மிகப்பெரிய அளவில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தி சாதனை புரிந்துள்ளார்.
முதல் தவணை தடுப்பூசி 71 சதவிகிதம் பேருக்கு மருத்துவர்களால் செலுத்தப்பட்டு, நிம்மதியான நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2-வது தவணை தடுப்பூசி 31 சதவிகிதம் பேருக்குச் செலுத்தப்பட்டுள்ளது. முதல்வரின் அறிவுறுத்தலின்படி முதல் தவணை தடுப்பூசியை 100 சதவிகிதம் அளவுக்கு உயர்த்துவதற்குப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இன்று தொடக்கக் கல்வி மற்றும் நடுநிலைப் பள்ளி பயிலும் மாணவர்கள் பள்ளி வந்திருக்கின்றனர். விருப்பமுள்ளவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திருந்தார். இன்று காலை தமிழக முதல்வர் மடுவின்கரையில் உள்ள சென்னை பள்ளி மாணவர்களை நேரடியாகச் சந்தித்து அவர்களுக்குப் பூங்கொத்து கொடுத்து, இனிப்புகள் வழங்கி வரவேற்றுள்ளார். தொடக்கக் கல்வி மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களை முதல்வராக இருந்து நேரடியாகச் சந்தித்து வரவேற்றது இந்திய வரலாற்றின் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய செய்தி''.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், முதன்மைக் கல்வி அலுவலர் ச.மார்ஸ், உதவி கல்வி அலுவலர் முனியன் மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.