

திருப்பூரில் தங்கிப் பயிலும் பள்ளியில் 13 மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து அச்சம் வேண்டாம் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துச் சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
''சென்னை மாந்தோப்புப் பள்ளியில் 2 ஆயிரம் மாணவர்கள் பயில்கின்றனர். அவர்களில் 80 சதவிகிதத்தினர் யாருடைய வற்புறுத்தல்களும் இல்லாமல், பள்ளிக்கு வந்துவிட்டுச் சென்றுள்ளனர். ஒரு வார காலம் மாணவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதத்தில் பள்ளிகளை நடத்த முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
இப்பள்ளியில் 8ஆம் வகுப்பில் 20 மாணவர்கள் பயில்கின்றனர். அவர்களிடம் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் ஆகியோருடன் பொது அறிவுக் கேள்விகள் கேட்டு, பதில் அளித்த அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் கேள்வி அறிவு சற்றும் குறையவில்லை. எதிர்காலத்தில் சிறந்த கல்வி அறிவு பெற்றவர்களாகத் திகழ்வார்கள்.
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 28ஆம் தேதி, விடுதியில் தங்கிப் பயிலும் பள்ளியில் 2 மாணவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட சுகாதார அலுவலர் அந்தப் பள்ளியில் பயில்கிற 115 மாணவர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அப்பள்ளியில் பயில்கிற 13 மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர்களைத் தனிமைப்படுத்தி அவர்களுக்குத் தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. முதல் நிலையில் அறிகுறிகள் கண்டறியப்பட்டிருப்பதால் இதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை.
பள்ளியில் மாணவர்கள் தகுந்த தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல் போன்றவற்றைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெற்றோர்களுக்கு மாணவர்கள் மூலம் கரோனா தடுப்பூசி செலுத்தும் அளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு, தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் என்று மாணவர்களால் சொல்லுமளவுக்கு ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப்படும். 18 வயதிற்கும் கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு மத்திய அரசின் அனுமதியும், ஐ.சி.எம்.ஆர். முடிவுக்குப் பிறகு தமிழகத்தில் சிறப்பான வகையில் அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும்''.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.