

ரூ.160.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தரமணி இணைப்புச் சாலை - வேளச்சேரி புறவழிச்சாலையை இணைக்கும் இரண்டாம் அடுக்கு மேம்பாலம் மற்றும் கோயம்பேடு, காளியம்மன் கோயில் தெரு - சென்னை புறநகரப் பேருந்து நுழைவு வாயில் சந்திப்பு மேம்பாலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
''தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (1.11.2021) சென்னை மாவட்டம், வேளச்சேரி, விஜயநகரம் சந்திப்பில், 67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தரமணி இணைப்புச் சாலை - வேளச்சேரி புறவழிச்சாலையை இணைக்கும் இரண்டாம் அடுக்கு மேம்பாலத்தைத் திறந்து வைத்தார்.
சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.108.00 கோடி மதிப்பீட்டில் வேளச்சேரி விஜயநகரம் சந்திப்பில் தரமணி சாலை, தாம்பரம் - வேளச்சேரி சாலை மற்றும் வேளச்சேரி புறவழிச் சாலையினை இணைத்து இரண்டடுக்கு மேம்பாலங்களாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலங்கள், பெருநகர சென்னை மாநகராட்சியில் மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த வேளச்சேரி விஜயநகர சந்திப்பில் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதில் ரூ.67 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரண்டாம் அடுக்கு மேம்பாலம், தரமணி இணைப்பு சாலை மற்றும் வேளச்சேரி புறவழிச்சாலையை இணைக்கும் மேம்பாலம் ஆகும். இம்மேம்பாலத்தின் நீளம் 1028 மீட்டர் ஆகும். இம்மேம்பாலத்தின் இருபுறமும் 7.5 மீட்டர் அகலம் கொண்ட சேவை சாலைகள் மற்றும் நடைபாதையுடன் கூடிய மழைநீர் வடிகால் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இப்பாலம் திறக்கப்பட்டுள்ளதால், தரமணியிலிருந்து வேளச்சேரி புறவழிச் சாலை செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் பயனடைவார்கள். இதனால் விஜயநகர சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் குறைந்து, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் சிரமம் குறையும்.
மேலும், இப்பாலத்தினால் கிண்டி, சைதாப்பேட்டை, தரமணி, வேளச்சேரி, கிழக்குக் கடற்கரைச் சாலை, பழைய மகாபலிபுரம் சாலை (OMR) தொழில்நுட்பப் பூங்கா சாலை, சோழிங்கநல்லூர், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, துரைப்பாக்கம் மற்றும் தாம்பரம் பகுதி மக்கள் மிகுந்த பயனடைவார்கள்.
அதனைத் தொடர்ந்து, கோயம்பேடு, ஜவஹர்லால் நேரு சாலையில் (IRR) காளியம்மன் கோயில் தெரு மற்றும் சென்னை புறநகரப் பேருந்து நுழைவு வாயில் சந்திப்பில் 93 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதல்வர் திறந்து வைத்தார்.
இம்மேம்பாலம் 980 மீட்டர் நீளமுள்ள நான்குவழிச் சாலை மேம்பாலமாகும். இந்த மேம்பாலமானது 1.20 மீட்டர் அகலத்திற்கு மையத் தடுப்புடன் கூடிய இருபுறமும் 7.5 மீட்டர் அகலமுள்ள ஓடுதளம் கொண்ட சாலை மேம்பாலம் ஆகும்.
இம்மேம்பாலத்தின் இருபுறமும் உள்ள சேவை சாலைகளின் அகலம் பாலப்பகுதியில் 12 மீட்டர் முதல் 14 மீட்டர் வரை மற்றும் அணுகு சாலை பகுதியில் 9 மீட்டர் அகலம் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. சேவைச் சாலையின் இருபுறமும் நடைபாதையுடன் கூடிய மழைநீர் வடிகால் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மேம்பாலத்தினால் இரண்டு போக்குவரத்து மிகுந்த முக்கிய சந்திப்புகளான காளியம்மன் கோவில் சந்திப்பு மற்றும் சென்னை பெருநகர பேருந்து நிலைய நுழைவாயிலுக்கு எதிரில் உள்ள சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும். இம்மேம்பாலத்தினால் திருமங்கலத்திலிருந்து வடபழனி மற்றும் வடபழனியிலிருந்து திருமங்கலம் செல்லும் வாகன ஓட்டிகளும், கோயம்பேடு, சின்மயாநகர், விருகம்பாக்கம், எம்எம்டிஏ காலனி, அரும்பாக்கம் மற்றும் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த மக்களும் பயனடைவார்கள்''.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.