பிறந்தநாளை முன்னிட்டு 7 நாட்களுக்கு அன்னதானத் திட்டம்: கமல் தொடங்கி வைத்தார்

பிறந்தநாளை முன்னிட்டு 7 நாட்களுக்கு அன்னதானத் திட்டம்: கமல் தொடங்கி வைத்தார்
Updated on
1 min read

கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று முதல் 7 நாட்களுக்கு `ஐயமிட்டு உண்' அன்னதானத் திட்டத்தை மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தை கமல் இன்று தொடங்கிவைத்தார்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

’’மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் 67வது பிறந்த நாளை (நவம்பர் 7) முன்னிட்டு, நவம்பர் 1 முதல் 7 வரை நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் என்ற வகையில் மொத்தம் 7 லட்சம் பேருக்குத் தமிழகம் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டமான `ஐயமிட்டு உண்' அன்னதானத் திட்டத்தைச் செயல்படுத்த முடிவுசெய்து, இன்று காலை 11 மணியளவில் கமல்ஹாசன் கொடியசைத்து திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கட்சித் துணைத் தலைவர் ஏ.ஜி.மௌரியா, மாநிலச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

இன்று, முதல் தவணையாக 9 வாகனங்களில் சுமார் 7,000 பேருக்கான உணவுகள் நகரின் பல பகுதிகளில் விநியோகிக்க, கமல்ஹாசனால் அனுப்பிவைக்கப்பட்டன. இந்த அன்னதானத் திட்டம், இன்றிலிருந்து தமிழகம் முழுவதும் ஏழு நாட்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை, அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

காலகாலமாக உடல் தானம், உறுப்பு தானம், கண் தானம், ரத்த தானம் என நற்பணிகளைத் தொடர்ந்து செய்துவந்த கமல்ஹாசன், தற்போது நாட்டில் பெருகிவரும் ஏழ்மையையும், அதன் ஆபத்தையும் உணர்த்தும்வண்ணம் இந்த ஆண்டு தனது பிறந்தநாள் பணியாக அன்னதானம் செய்வதென்று முடிவெடுத்து, அதை இன்று தொடக்கி வைத்துள்ளார்’’.

இவ்வாறு மநீம தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in