

தமிழகத்தில் நல்லாட்சி, நல்ல நிர்வாகம் அமைய வேண்டும் என்று அறிஞர் அண்ணா - வ.உ.சி கூட்டமைப்பின் நிறுவனத் தலைவரும் வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஜி.விசுவநாதன் கூறியுள்ளார்.
அனைத்து முதலியார், பிள்ளைமார் சமுதாயங்கள் இணைந்து ‘அறிஞர் அண்ணா - வ.உ.சி கூட்டமைப்பு’ தொடங்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நேற்று நடைபெற்றது. கூட்டமைப்பின் நிறுவனத் தலைவரும் வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஜி.விசுவநாதன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தலைவர் கே.பி.கே.செல்வராஜ், கவுரவத் தலைவர்கள் ஜெயபால் மற்றும் கே.ராஜன், பொதுச்செயலாளர் அருணாசலம் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்துக்கு பிறகு ஜி.விசுவநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:
அனைத்து முதலியார், பிள்ளைமார், வேளாளர், செங்குந்தர் உட்பட 46 சமூக அமைப்புகளை ஒன்றாக இணைத்து கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பில் உள்ள சமூக அமைப்புகளில் 1 கோடியே 10 லட்சம் பேர் உள்ளனர். கூட்டமைப்பை தேர்தலுக்காக தொடங்கவில்லை. தமிழகத்தில் ஊழல் அதிகரித்துவிட்டது. தற்போதைய நிலை மாற வேண்டும். தமிழகத்தில் நல்லாட்சி அமைய வேண்டும். நல்ல நிர்வாகத்தை கொடுக்க வேண்டும். முதலியார், பிள்ளைமார் சமூகத்தினருக்கு முக்கியத்துவம் கிடைக்க வேண்டும்.
கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்துறை, மின்சாரதுறைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முதலில் கல்விக்கு முக்கியத்துவத்தை கொடுத்துவிட்டு, அரசு இலவசங்களை கொடுக்க வேண்டும். வரும் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது பற்றி முடிவெடுக்க என்னுடைய தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு மாவட்டங்கள் வாரியாக ஆலோசனை நடத்தி ஒருவாரத்தில் முடிவை அறிவிக்கும்.
இவ்வாறு ஜி.விசுவநாதன் தெரிவித்தார்.