Last Updated : 01 Nov, 2021 03:06 AM

 

Published : 01 Nov 2021 03:06 AM
Last Updated : 01 Nov 2021 03:06 AM

குழந்தைகளிடம் இருந்து கற்கவேண்டிய பாடங்கள்

கோப்புப் படங்கள்

பள்ளிகள் திறந்தாகிவிட்டது. பள்ளித் திறப்பை பெரும் திருவிழாவாக கொண்டாட வேண்டும் என்று கல்வியாளர்கள், கல்வி நேசர்கள், ஆசிரியர்கள் திட்டமிட்டனர். தமிழக முதல்வரின் அறிவிப்பும்,அழைப்பும் இந்த கொண்டாட்டத்தை வெகுவீச்சோடு கொண்டு சென்றுவிடும். கொண்டாட்டத்தின் பல்வேறு வடிவங்களை பல்வேறு ஊடகங்களில் கண்டு மகிழலாம். துவண்டு கிடந்த குழந்தைகள் மனதில் புதிய உற்சாக விதையை இந்த கொண்டாட்டம் ஊன்றும். தமிழக அரசின் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம், குழந்தைகளின் கற்றல் மனத்தை மீட்டெடுக்கவும், கற்றல் இணை செயல்பாடுகள் வழியாக கற்கும் வேகத்தை தூண்டவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வளவுதான் என்று அளவிடமுடியாத இழப்புகளை சரிக்கட்ட இதெல்லாம் அவசர அவசியம்.

கற்றல் இழப்பு, கற்றல் இடைவெளி, அதை ஈடுசெய்தல் அல்லது குறைத்தல் என்று எடுக்கப்படும் நடவடிக்கைகள் மத்தியில், குழந்தைகள் மனதில் இருந்து வெளிக்கொண்டு வரவேண்டிய ஓர் உன்னதப் பகுதி உள்ளது. அது, கல்வியாளர்களுக்கே கல்வி கற்றுத்தர வல்லது. வருங்கால பாடத் திட்டம், கலை திட்டம், ஆகியவற்றில் புதிய வெளிச்சம் பாய்ச்சவல்லது. குழந்தைகள் மனதில் கொட்டிக் கிடக்கும் கரோனா காலம் கற்றுத் தந்த பாடங்களை வெளிக் கொண்டுவர வேண்டும். அவர்கள் பெற்றுள்ளபடிப்பினைகளை யாரோடும் பகிர்ந்து கொண்டிருக்க வாய்ப்பு இல்லை. காது கொடுத்து கேட்கப்படாமல் இருக்கிறது. ஒருவேளை, குழந்தைகள் அதை பகிரத் துடித்தாலும், கண்டுகொள்ளாத மனங்களாக நம் மனங்கள் கெட்டிதட்டிப் போயிருக்கலாம்‌. ஆனால், இந்த கரோனா காலத்தில் குழந்தைகள் கற்ற பாடங்களை, சமூகம் குழந்தைகளிடம் இருந்து கற்க வேண்டும்.

பள்ளிகள் இல்லை, ஆசிரியர் இல்லை, பாடப் புத்தகம் இல்லை, பள்ளி கற்றுத் தரும் கூட்டு அனுபவம் இல்லை. இத்தனையும் இல்லாத நிலையிலும் குழந்தைகள் கற்றுக்கொண்டேதான் இருந்துள்ளனர். அது என்ன என்று ஆய்ந்துஅறிய‌ வேண்டும். மீண்டும் இப்படியான அனுபவப் பாடங்கள் எந்த குழந்தைக்கும் எந்த காலத்திலும் கிடைக்காமலே போகலாம். இந்த கல்வியை தொகுத்து அதன் சகலபரிமாணங்களுடன் பார்க்க வேண்டும். அதில் இருக்கும் விஷயங்களை நாம் ஆராய்ந்து பார்த்து, என்ன செய்ய வேண்டும் என்றுசிந்திக்க வேண்டும். பல தலைமுறைகளுக்கு பயன்படும் வகையிலானகற்றல், குழந்தைகள் மனதில் நிகழ்ந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில், சேகரித்த அனுபவங்கள் என்னவாக மனங்களில் பொதிந்து இருக்கும்? அதை எவ்வாறு எதிர்கால கல்வியியல் முதலீடாக மாற்ற முடியும் என்று சிந்திக்க வேண்டும்.

சத்தியமங்கலம் மலை கிராமங்களில், பழங்குடி குழந்தைகள் மத்தியில், 2 ஊர்களில் இரண்டு வகைப்பட்ட முடிவுகள் கிடைத்தன. 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அவர்கள். தினமும் காலை எழுந்தது முதல் மாலை இருள் சூழும் நேரம் வரை அந்த வனத்துக்குள் அலைந்து திரிந்து கொண்டிருப்பார்கள். இந்தஒன்றரை ஆண்டில் எத்தனை வகைமரம், செடி, கொடிகள், புல் பூண்டுகள், உயிரினங்களை அவர்கள் பார்த்து இருப்பார்கள்? அதில் இருந்து என்ன கற்றுக்கொண்டு இருப்பார்கள்? எப்படி? யார் இதை கண்டறிவது? அவர்களின் அந்த அனுபவப் பாடங்களில் இருந்து நம் கல்வித் துறை, கல்வியாளர்கள், பாடத் திட்ட வடிவமைப்பாளர்கள் கற்றுக்கொள்ள ஏதும் இல்லையா.

அதேபோல, அதே மலைப் பகுதியில் கடம்பூர் அருகில் அட்டனை என்ற கிராமத்தில் சில குழந்தைகளை சந்தித்தேன். கரோனா காலத்தில் என்ன கற்றுக் கொண்டீர்கள் என்று அவர்களிடம் கேட்டேன். ‘‘காட்டில் களைகளைக் கூட்டி, எப்படி தீயிட வேண்டும் என்று கற்றுக்கொண்டேன்’’ என்றான் ஒரு சிறுவன். ‘‘ஏர் உழுது சோளம் விதைக்கும்போது, சோளம்விடுவது எப்படி என்று கற்றுக்கொண்டேன்’’ என்று 4 பெண் குழந்தைகள் கூறினர். மரவள்ளிக் கிழங்கு குச்சி நடுதல், கல் பொருக்குதல், வரப்பில் முளைத்திருக்கும் செடிகளை எவ்வாறு அறுப்பது? கரும்புக்கருணை பதித்தல், சீம்மார் புல்முடி போடுதல் என்று பல தொழில்களை கற்றுக்கொண்டதாக கூறினர்.இவர்கள் மிகவும் சிறிய குழந்தைகள். இந்த கரோனா காலத்தில் என்ன கற்றுக்கொண்டீர்கள்? என்றுநேரடியாக அவர்களிடம் கேட்டால் அவர்களுக்கு எது கற்றல் என்றுகூட உணரத் தெரியவில்லை.

கரோனா பெருந்தொற்று காலமாக இல்லாமல் இருந்திருந்தால் இத்தொழில்களை இப்போது கற்றிருக்க மாட்டார்கள். அவர்களுக்கு ஏற்ற புதிய விளையாட்டுகளை அவர்களே வடிவமைத்துக் கொண்டிருக்கிறார்கள். கரோனா காலத்தில் குழந்தைகள் கற்றுக்கொண்டபாடங்களை அவர்களிடம் இருந்துவெளிக்கொண்டுவர புதிய உத்திகள் தேவை என்பதையும் உணரமுடிந்தது.

வசதியானவர்கள், வறியவர்கள் என எல்லா வீட்டு குழந்தைகளும் பலவித வாழ்க்கைப் பாடங்களை கற்றுக் கொண்டுள்ளனர். துக்கமோ, துயரமோ, மகிழ்ச்சியோ, அதில் குழந்தைகள் பாடம் கற்றுக் கொண்டுள்ளனர். சாதாரண நேரங்களில் கற்றுக்கொள்ள முடியாத பாடங்கள் குழந்தைகள் மனதில் படிந்து கிடக்கிறது. இந்த நூற்றாண்டின் அசாதாரண பேரிடர் பெருந்தொற்று காலம் எனில் அதற்கு தக்கவாறு கஷ்ட நஷ்டங்கள் பற்றியபுரிதல்/ பாடங்களை படித்து முடித்து இருக்கிறார்கள்.

குழந்தைகள் இழந்த பாடத்தை எப்படியும் கற்றுத்தந்து விடுவோம். அதற்கான தெளிவான திட்டங்கள் இருக்கிறது. ஆனால், குழந்தைகள் கற்றுக்கொண்ட பாடங்கள் என்னஎன்று எப்போது நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம்? அவர்கள்கற்றுக்கொண்ட முறை நமது பள்ளிக் கல்வி பாடத்திட்டம், கற்றல்,கற்பித்தல் முறைகள் ஆகியவற்றுக்கு உறுதுணையாக இருக்கலாம். தேவையான மாற்றங்களை செய்யச் தூண்டுவதாக இருக்கலாம். இப்போது அதை ஆவணப்படுத்தவில்லை என்றால் எப்போதும் ஆவணப்படுத்த முடியாது. ‌

கட்டுரையாளர்: பேராசிரியர், தலைவர். பொருளாதாரத் துறை,ஈரோடு கலை, அறிவியல் கல்லூரி. தொடர்புக்கு: tnsfnmani@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x