

கேரளாவுக்கு முல்லை பெரியாறு அணை நீர் திறப்பை அதிகரித்த நிலையில், அணையில் சிறப்புக் கோட்ட மண்டலத் தலைமைப் பொறியாளர் ம.கிருஷ்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டு தண்ணீர் திறப்பை பார்வையிட்டார்.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்த உச்ச நீதிமன்றம் 2014-ம் ஆண்டில் உத்தரவிட்டது. இருப்பினும் அணையின் பலம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளை கேரள அரசு எழுப்பி, நீர்மட்டத்தை உயர்த்துவதில் தொடர்ந்து தடை ஏற்படுத்தி வருகிறது. நீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகு 2014, 2015 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் மட்டுமே 142 அடிக்கு தண்ணீர் தேக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது பெய்துவரும் மழையால் அணையில் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால், அணையில் இருந்து கேரள பகுதிக்கு கடந்த 29-ம் தேதி திடீரென தண்ணீர் திறக்கப்பட்டது. தமிழகத்துக்கான பாசன நீரை கேரள பகுதிக்கு கொண்டு சென்றதால் 5 மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
முதல் நாளில் விநாடிக்கு 517 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் 2 ஆயிரத்து 974 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. மின்சாரம் தயாரித்த பிறகு இந்ததண்ணீர் கடலில் கலந்து வருகிறது.
உச்ச நீதிமன்ற வழிகாட்டலை மீறி, தண்ணீரை கேரள பகுதிக்கு திருப்பியதால் 5 மாவட்டங்களுக்கு பாசன நீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
இந்நிலையில் அணைப் பகுதியை சிறப்புக் கோட்ட மண்டலத் தலைமைப் பொறியாளர் ம.கிருஷ்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அணையின் செயற்பொறியாளர் ஷாம் இர்வின்,உதவி பொறியாளர் ராஜகோபால் ஆகியோர் உடன் இருந்தனர்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறி அணை நீரை தங்கள் பகுதிக்கு கொண்டு சென்ற கேரள அரசைக் கண்டித்து பல்வேறு விவசாய சங்கங்களும், அமைப்புகளும் போராடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.
இதுகுறித்து ஐந்து மாவட்டவிவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில், கேரளாவின் இச்செயல் தமிழக இறையாண்மையை பாதிப்பதாக உள்ளது. எனவே கேரள மாநில எல்லைகளில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருக்கிறோம் என்றார்.
ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன நீர் விவசாயிகள் சங்கத் தலைவர் அப்பாஸ் கூறுகையில், கேரளாவின் இப்போக்கு முல்லை பெரியாறு அணை குறித்தஒப்பந்தத்தை மீறும் வகையில் உள்ளது. தொடர்ந்து ஒவ்வொருநாளும் அதிகளவு நீரை கேரளாவுக்கு கொண்டு செல்வதால், தமிழகம் பெரியளவில் பாதிக்கப்படும். பாகுபாடின்றி அனைத்து விவசாயிகளும், சங்கங்களும் போராடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம் என்றார்.
கேரள அமைச்சர்கள் முகாம்
இந்நிலையில் முல்லை பெரியாறு அணைப் பகுதியில் கேரள நீர்வளத் துறை மற்றும் விவசாயத்துறை அமைச்சர்கள் ரோஷி அகஸ்டின், பிரசாத் ஆகியோர் தொடர்ந்து முகாமிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
தமிழக கட்டுப்பாட்டில் உள்ளஅணைப் பகுதியில் கேரள அமைச்சர்களின் ஆய்வு விவசாயிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.