

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காவேரி மருத்துவமனைக்கு சென்று, நடிகர் ரஜினியின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார்.
டெல்லியில் கடந்த 25-ம் தேதி நடைபெற்ற தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.
சென்னை திரும்பிய ரஜினி,குடும்பத்தினருடன் தனது நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக உள்ள ‘அண்ணாத்த’ திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்தார்.
இந்நிலையில், கடந்த 28-ம்தேதி ரஜினிக்கு மயக்கம், தலைச்சுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டதில், மூளைக்கு செல்லும் கழுத்துப் பகுதியில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவர்கள் சிகிச்சை அளித்து, அடைப்பை சரிசெய்தனர். அவருக்கு ஏற்கெனவே சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருப்பதால், அவரது உடல்நிலையை மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.
சிகிச்சைக்குப் பின்னர், ரஜினியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சில தினங்களில் அவர் மருத்துவமனையில் இருந்து வீடுதிரும்புவார் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என்று அவரதுகுடும்பத்தினரும், ரசிகர்களுக்கு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலைமருத்துவமனைக்கு சென்று ரஜினியின் நலன் குறித்து விசாரித்தார். மேலும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த முதல்வர், அவருக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
மா.கம்யூ. பாலகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன், நேற்று முன்தினம் மாலை மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு, சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், முதல்வர்மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று, பாலகிருஷ்ணனை சந்தித்து நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்த முதல்வர், அவருக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கும்படி டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார். அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், மருத்துவமனை டீன் தேரணிராஜன் உடனிருந்தனர். முன்னதாக, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பாலகிருஷ்ணனிடம் நலம் விசாரித்தார்.
இதுகுறித்து மருத்துவமனை டீன் தேரணிராஜன் கூறும்போது, “கே.பாலகிருஷ்ணன் தற்போது நலமுடன் இருக்கிறார். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் வீடு திரும்புவார்” என்றார்.