Published : 01 Nov 2021 03:06 AM
Last Updated : 01 Nov 2021 03:06 AM

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடத்திய ‘கலாமை கொண்டாடுவோம்’ இணையவழி சிறப்பு கலந்துரையாடல்: அப்துல் கலாம் குறித்து விஞ்ஞானிகள் பெருமிதம்

சென்னை

இந்தியா போர் விமானத்துறையில் சுயசார்பை அடைய வேண்டும் என்று கனவு கண்டவர் அப்துல் கலாம் என்று ‘கலாமை கொண்டாடுவோம்’ இணையவழி கலந்துரையாடல் நிகழ்வில், கலாமுடன் இணைந்து பணியாற்றிய விஞ்ஞானிகள் பெருமிதத்துடன் குறிப்பிட்டனர்.

இந்திய குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் 6-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் ‘கலாமை கொண்டாடுவோம்’ எனும்இணையவழி சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், விஞ்ஞானியும், அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகருமான டாக்டர் வெ.பொன்ராஜ், தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்ற இயக்குநரும், ராணுவ விஞ்ஞானியுமான டாக்டர் வி.டில்லிபாபு ஆகியோர் பங்கேற்று கலந்துரையாடினர். இதில் அவர்கள் பேசியதாவது:

விஞ்ஞானி டாக்டர் வெ.பொன்ராஜ்: நான் 10-ம் வகுப்பு படிக்கும்போதே அப்துல் கலாமைப் பார்க்க வேண்டும், அவரிடம் ஆட்டோகிராப் வாங்க வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. கலாமைப்போல நானும் ஒரு விஞ்ஞானியாக வேண்டுமென்ற கனவும் எனக்குள் பிறந்தது.

கலாமைப் பற்றி பத்திரிகைகளில் வரும் செய்திகளை தொடர்ந்து வாசித்து வந்தேன். அக்னி, பிருத்வி, ஆகாஷ் போன்ற ஏவுகணைத் திட்டங்களில் அவர் செயல்பட்டு வருவதை நாளிதழ்கள் வழியாக அறிந்துகொண்டேன். ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்குப் பிறகு, டிஆர்டிஓ-வின் கீழ்வரும் சொஸைட்டியான ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் ஏஜென்சியில் விஞ்ஞானியாக நான் பணியில் சேர்ந்தேன்.

போர் விமானங்களைத் தயாரிக்கும் அந்நிறுவனத்தில் சேரும்வரை, அதன் தலைவர் அப்துல் கலாம் என்று எனக்குத் தெரியாது. அந்தநிறுவனத்தில் நடைபெற்ற விழாவுக்கு கலாம் வந்தபோது, நான் அவரை சந்தித்தேன். தொடர்ந்து 20 ஆண்டுகள் அவரோடு இணைந்து பயணிக்கப் போகிறோம் என்று அப்போது எனக்குத் தெரியாது.

இந்தியா 95 சதவீதம் சுயசார்பு

தற்போது ராக்கெட் தொழில்நுட்பத் துறையில் இந்தியா 95 சதவீதம் சுயசார்பை அடைந்துள்ளது. இதற்கு அடித்தளம் அமைத்ததில் கலாமுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு.

இந்தியா போர் விமானத்துறையில் சுயசார்பை அடைய வேண்டும் என்று அவர் கனவு கண்டார்.

நமது நாடு சொந்தமாக போர்விமானத்தை உருவாக்க வேண்டும்என்பதை தொடர்ந்து வலியுறுத்தியதுடன், அதற்கான செயல்பாடுகளையும் மிகுந்த அக்கறையுடன் முன்னெடுத்தார். அதுகுறித்து கவிதைகூட எழுதினார்.

தற்போது 108 ஆம்புலன்ஸ் அவசரஊர்தி இந்தியா எங்கும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. கலாம் தலைவராக இருந்து, இந்த திட்டத்தைத் தொடங்கிவைத்தார் என்பது பலரும் அறியாதது.

ராணுவ விஞ்ஞானியும், அறிவியல்எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு: பொது வெளியில் கலாம் `ஏவுகணை மனிதர், ஏவுகணை நாயகன்'என்றெல்லாம் அறியப்படுகிறார். ஏவுகணை என்பது ஒருவழிபாதைக்கானது. நாம் ஏவி, அதன் இலக்கை அடைந்ததும் அது முடிந்துவிடுகிறது.

ஆனால், அதைவிட பல மடங்குதொழில்நுட்பங்கள் நிறைந்த சவாலான பணி, போர் விமானங்களை உருவாக்குவது. போர் விமானம் எப்படி தரையிலிருந்து கிளம்புகிறதோ, அதேபோல மேலே சென்று வட்டமடித்து, எதிரியை வீழ்த்திவிட்டு, மறுபடியும் தரையிறங்கி வர வேண்டும். ஏவுகணையில் எந்த மனிதரும் உட்கார்ந்து பயணிப்பதில்லை. ஆனால், போர் விமானத்தில் ஒருஉயிருள்ள போர் விமானி உட்கார்ந்து பயணிக்கிறார்.

அந்த விமானியின் உயிரையும் பாதுகாக்கும் கடமை, அதை வடிவமைக்கிற நமது ராணுவ விஞ்ஞானிகளுக்கு இருக்கிறது.

`தேஜஸ்' விமானத்தில் கலாம் பங்கு

கலாம் ஏவுகணை நாயகனாக வெளியுலகுக்கு அறியப்படும் அதேவேளையில், சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய தொழில்நுட்பப் படைப்புஎன்று நாம் பேசுகிற, ‘தேஜஸ்’ எனப்படும் இலகுரக போர் விமானங்களை கலாம் செய்து முடித்தது அவரது மிகப் பெரிய பங்களிப்பாகும்.

இன்றைக்கு இலகுரக போர் விமானங்கள் உருவாக்கப்பட்டு, பல சோதனைகளையும் வெற்றிகரமாக முடித்து, விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அந்த விமானப் படையின் பிரிவு நமது தமிழ்நாட்டில் அமைந்திருப்பது நமதுஅனைவருக்கும் பெருமைதரக்கூடியது.

கோவையில் உள்ள சூலூர் விமானப்படைத் தளத்தில் இலகுரக விமானப் படைப் பிரிவு அமைந்தது, கலாமுக்கும் மிகப் பெரிய மகிழ்வைத் தந்தது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்வை, ‘இந்து தமிழ் திசை’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் நெறிப்படுத்தினார். நிகழ்வைக் காணத் தவறியவர்கள் https://www.htamil.org/00103 என்ற லிங்க்-ல் பார்த்துப் பயன்பெறலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x