

உடுமலையில் ஆணவக் கொலையால் பாதிக்கப்பட்ட கவுசல்யாவின் படிப்புச் செலவை அரசு ஏற்க வேண்டுமென மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
சங்கரின் கொலைக்கு காரணமானவர்களை ஜாமீனில் விடுவிக்கக்கூடாது. சங்கரின் வீட்டுக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அவர்கள் வெளியே வந்தால் சாட்சிகள் கலைக்கப்படலாம். மேலும், சங்கரின் மனைவி, குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தக்கூடும். இந்த வழக்கை துரிதமாக நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். தற்போது, கொலையில் நேரிடையாக ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மறைமுகமாக தொடர்புடையவர் களையும் கைது செய்ய வேண்டும்.
கவுசல்யா, தொடர்ந்து படிப்பதற்கு உதவி செய்வதாக அகில இந்திய ஆயுள் காப்பீட்டு ஊழியர் சங்கம் உறுதி அளித்துள்ளது. இதேபோல், பல அமைப்புகள் உதவி செய்வதாக தெரிவித்துள்ளன. இருப்பினும், ஆணவக் கொலையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கல்விச் செலவை அரசு ஏற்றுக்கொள்வதுதான் சரியானது. கல்விக்கான முழுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, அவருக்கு நல்ல பொறியியல் கல்லூரியில் கல்வி வழங்க வேண்டும்.
சங்கரின் குடும்பத்துக்கு பசுமை வீடு தர தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின நல ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதனை ஏற்று பசுமை வீட்டை உடனடியாக வழங்க வேண்டும். அரசு சார்பில் ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும். சங்கரின் கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் இந்த ஆணவக் கொலையை ஆதரித்து பதிவுகள் வருகின்றன. இது தொடர்பாக போலீஸில் புகார்கள் அளித்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சமூக வலைத்தளங்களில் இதுபோன்று பதிவிடுவோர் மீது எஸ்.சி., எஸ்.டி. தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்தால்தான் சாதிய தூண்டுதல் நடவடிக்கை குறையும். ஆணவக் கொலையைத் தடுக்க சிறப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பிருந்தா காரத் தலைமையில் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெற்று அப்போதைய அரசிடம் சமர்ப்பித்தோம். இதையடுத்து, ஒரு குழுவை மத்திய அரசு அமைத்தது. ஆனால், அந்தக் குழு செயல்படவில்லை. எனவே, அந்தக் குழு செயல்பட அனுமதிக்க வேண்டும்.
சமீப காலமாக பள்ளி மாணவர்களிடம் திட்டமிட்டு சாதிய வெறி தூண்டப்படுகிறது. சாதியை வெளிப்படுத்துவதற்காக பள்ளி மாணவர்களின் கைகளில் குறிப்பிட்ட கயிற்றை கட்டி தூண்டிவிடுகின்றனர். இதை தடுக்க அரசு போதிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
முதல்கட்டமாக, ‘சாதி வெறி என்பது புற்றுநோய்’ என்ற பாடத் திட்டத்தை கொண்டுவந்து பயிற்றுவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கவுசல்யாவுடன் சந்திப்பு
முன்னதாக, கவுசல்யாவை மாதர் சங்கத்தினர் சந்தித்தனர். அப்போது, ஆணவக் கொலையால் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டையைச் சேர்ந்த அபிராமியும் உடன் சென்றார்.
சந்திப்பின் போது, தஞ்சை மாவட்டச் செயலாளர் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட மாதர் சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.