

பொன்னேரி அருகே அ.ரெட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சோமஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த வினோத் மகள் வினோதினி(8), கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்ததால் தனியார், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார்.
பிறகு, கடந்த 29-ம் தேதி மேல் சிகிச்சைக்காக சென்னை, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வினோதினி, சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதேபோல் வினோதினியின் தம்பி டேனியல்(6) உள்ளிட்ட 7 பேர் மர்ம காய்ச்சல் காரணமாக நேற்று முன்தினம் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து, நேற்று பொன்னேரி எம்எல்ஏ துரை. சந்திரசேகர்,கோட்டாட்சியர் செல்வம், மீஞ்சூர் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் ஆகியோர் சோமஞ்சேரி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அதுமட்டுமல்லாமல், வட்டார மருத்துவர் ராஜேஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சோமஞ்சேரியில் முகாமிட்டு, மருத்துவ பரிசோதனைகள், சிகிச்சைகளை மேற்கொண்டனர்.
அப்போது, மேலும் 3 பேருக்கு மர்ம காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. ஆகவே, அந்த 3 பேரும் நேற்று ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, தற்போது சிகிச்சை பெற்றுவரும் சோமஞ்சேரியைச் சேர்ந்த 10 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அந்த பரிசோதனையில் முடிவில்தான் எந்த வகை காய்ச்சல் என்பது தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.