

முல்லை பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் மதுரையில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி 139 அடிக்கு மேல் தண்ணீரை வைக்க வேண்டாம் என தமிழக நீர்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியதன் அடிப்படையில் நாங்கள் திறந்தோம் என கேரள அரசு தெரிவிக்கிறது. இதை அதிமுக உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது.
முல்லை பெரியாறில் 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை 2007-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் மூலம் பெற்றுக் கொடுத்தவர் ஜெயலலிதா. 2011-ல் ஆட்சிக்கு வந்தபின் 142 அடியாக உயர்த்திக் காட்டியவரும் அவரே. மேலும், இருமுறை 142 அடி தண்ணீரைத் தேக்கி வைத்து இருக்கிறோம். தற்போதைய திமுக அரசு இதை நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையெனில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங் கிணைப்பாளர் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் கலந்துபேசி கேரள, தமிழக அரசுகளைக் கண்டித்து மதுரையில் விரைவில் போராட்டம் நடத்துவோம்.
திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. சட்டப்பேரவை உறுப்பினர் நிதிகூட எங்களுக்கு ஒதுக்கவில்லை. தொகுதியில் வளர்ச்சிப் பணிகளைச் செய்ய நிதி ஒதுக்கவேண்டும். நடிகர் ரஜினி விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்புவதோடு மேலும் பல படங்களில் அவர் நடிக்க வேண்டும். தமிழ்நாடு என பெயர் சூட்டிய தினத்தை எடுத்துக் கொள்ளாமல்,வரைபடம் உருவானதை வைத்து எல்லைகள் விரிவாக்கம் செய்யப்பட்டதை வைத்து தமிழ்நாடுநாள் கொண்டாடப்பட வேண்டும் என்றார்.