

தேசிய கல்வியாளர்கள் பேரவை சார்பில் தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்திடவும், தமிழகம் முழுவதும் நவோதயா பள்ளிகளை தொடங்கிடவும், மும்மொழி திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி வேலூரில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்குக்கு அமைப்பின் தலைவரும், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான பாலகுருசாமி தலைமை வகித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "பிற மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள தேசிய கல்விக்கொள்கை, நவோதயா பள்ளிகள், நீட் தேர்வு ஆகிய வற்றுக்கு தமிழகத்தில் மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனால், அகில இந்திய அளவில் தமிழக மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. தேசிய அளவிலான தேர்வுகளிலும் தமிழக மாணவர்களால் தேர்ச்சி பெற முடியவில்லை.
மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப மாணவர்களை நாம் தயார்படுத்த வேண்டுமே தவிர அவற்றை முழுமையாக எதிர்ப்பதில் அர்த்தம் இல்லை. பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இவற்றையும் கருத்தில் கொண்டு தமிழகத்தில் தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்தவும், தமிழகம் முழுவதும் நவோதயா பள்ளிகளை தொடங்கவும், மாநிலத்தில் மும்மொழி கல்வி திட்டத்தை அமல்படுத்த முன் வர வேண்டும்.
நீட் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றமே தலையிட்டுள்ளது. எனவே, ஆண்டவனே நினைத் தாலும் இனி நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது. நீட் தேர்வு தொடர்பாக தமிழகத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு அளித்த அறிக்கை அபத்தமானது. இந்த அறிக்கையால் தமிழகத்துக்கு அவமரியாதை ஏற்படுகிறது. இந்த அறிக்கையை மத்திய அரசு ஏற்க வாய்ப்பில்லை.
தமிழகத்தில் கல்வியின் தரம் மேம்படுத்தப்பட வேண்டும். அதில் பாடத் திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும். இதனை 10 ஆண்டுகளுக்கு முன்பே மாற்றியமைத்திருந்தால் மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்திருப்பார்கள். மற்ற மாநிலங்களில் கல்வி வளர்ச்சிக்கு என தனிக்குழு உள்ளது. அதேபோல், தமிழகத் திலும் கல்விக்குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் தற்போதுள்ள நிலை நீடித்தால் தமிழகத்தில் வழங்கப்படும் பட்டங்கள் பயனற்று போகும். அந்த பட்டங்கள் செல்லாததாக மாறிவிடும்’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், பேராசிரியர் கனகசபாபதி, பழனிசாமி, பேராசிரியர் கே.ஆர்.நந்தகுமார், சிருஷ்டி பள்ளிகளின் குழுமத் தலைவர் சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.