

தமிழ்நாடு கால்நடைத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, அந்தப் பதவியிலிருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார். காஞ்சி கிழக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் அந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் பதவியிலிருந்து சின்னையா நீக்கப்பட்டதையடுத்து, கால்நடைத் துறை அமைச்சக கூடுதல் பொறுப்பு, அமைச்சர் வளர்மதிக்கு அளிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையை ஏற்று, இதற்கான உத்தரவை ஆளுநர் ரோசய்யா பிறப்பித்துள்ளார்.
பின்னணி என்ன?
அண்மையில் பால்வளத்துறை அமைச்சர் பி.வி.ரமணா நீக்கப்பட்டார். அவர் நீக்கப்பட்டதற்கான காரணம் வாட்ஸ் அப்பில் உலவிய சர்ச்சைக்குரிய ஃபோட்டோ என்று பேசப்பட்டாலும் உண்மைக் காரணம் என்னவென்று வெளிப்படையாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.
அந்த வரிசையில், இப்போதும் சின்னையா நீக்கத்தின் பின்னணி என்னவென்று தெரிவிக்கப்படவில்லை.
24-வது முறை:
கடந்த 5 ஆண்டுகளில் தமிழக அமைச்சரவை 23 முறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதில் 3 முறை மட்டும் அமைச்சர்கள் மறைவால் மாற்றப்பட்டது.
விஜயபாஸ்கர் கட்சிப் பதவி பறிப்பு:
புதுக்கோட்டை மாவட்ட கழகச் செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக கழக விவசாயப்பிரிவு செயலாளர் பி.கே.வைரமுத்து அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். கழக விவசாயப்பிரிவு செயலாளர் பி.கே.வைரமுத்து அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இருவர் நீக்கம்:
தாம்பரம் நகர கழக செயலாளர் பொறுப்பிலிருந்து ம.கரிகாலன் நீக்கப்பட்டார். இந்தப் பொறுப்பை கூடுதலாக சிட்லபாக்கம் ராஜேந்திரன் கவனிப்பார் என கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மத்திய மாவட்ட கழகச் செயலாளர் பொறுப்பிலிருந்து தண்டரை கே.மனோகரன் நீக்கப்பட்டார். அவர் வகித்து வந்த பொறுப்பில், எம்.கூந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.