Last Updated : 31 Oct, 2021 01:11 PM

 

Published : 31 Oct 2021 01:11 PM
Last Updated : 31 Oct 2021 01:11 PM

டாஸ்மாக் பார் திறப்பை மறுபரிசீலனை செய்க: அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

டாஸ்மாக் பார்களை திறக்கும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

’’கல்வி என்பது மாணவர்களின் எதிர்காலம், நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம். கல்வியை நல்வழியில் கற்பிப்பதே தேவை. எனவே, அரசின் "இல்லம் தேடிக் கல்வி" திட்டத்தில் அரசியல் சாயம் தேவை இல்லை.

1956, நவ.1-ம் தேதி மொழிப்போர் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. முந்தைய அரசு அந்த நாளை தமிழ்நாடு தினமாக அறிவித்தது. இந்த அரசு ஜூலை 18-ம் தேதியை அறிவித்துள்ளது. இதேபோல், தமிழ்ப் புத்தாண்டு நாள் விவகாரத்திலும் தை, சித்திரை என கருத்து வேறுபாடு உள்ளது. இந்த விவகாரங்களில் தமிழ் உணர்வாளர்கள், ஆர்வலர்கள், அறிஞர்கள் மற்றும் சில அரசியல் கட்சிகள் பல்வேறு கருத்துகளைக் கூறிக் கொண்டிருக்கின்றன. இந்த விவகாரங்களில் அனைத்துத் தரப்பினரிடத்திலும் ஒத்தக் கருத்தை ஏற்படுத்துவது அரசின் கடமை.

கரோனா முடியாத நிலையில் டெங்கு, மலேரியா ஆகியவையும் பரவி வருகின்றன. இந்தச் சூழலில் டாஸ்மாக் பார்களை திறப்பது எந்த விதத்திலும் நியாயமல்ல. எனவே, டாஸ்மாக் பார்களைத் திறக்கும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

வேளாண் மண்டலமாக அறிக்கப்பட்டுள்ள காவிரி டெல்டா பகுதியில், இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் சென்னை பெட்ரோ கெமிக்கல் நிறுவனம் ஆகியவை இணைந்து ரூ.31,000 கோடியில் 90 லட்சம் டன் திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையம் அமைத்து வருவதை உடனே நிறுத்த வேண்டும். ஏனெனில், இதுபோன்ற திட்டம் விவசாயப் பகுதிக்கு உகந்தது அல்ல. லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாழாகும். சுற்றுச்சூழலைப் பாதிக்கும். எனவே, இந்தத் திட்டத்தை நிறைவேற்ற அளித்த ஒப்பந்தப் புள்ளியை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நமது உரிமைகளை தமிழ்நாடு அரசு விட்டுக் கொடுக்க கூடாது. அணை திறக்கப்பட்டு தொடர்ந்து தண்ணீரை வெளியேற்றுவது விவசாயிகளிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவது அரசின் கடமை.

மழையால் பாதிப்பு நேராத வகையில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதத்தை நீக்கக்கூடிய கருவிகளை அரசு நிறுவ வேண்டும். விவசாயிகளுக்கு நெல் மணிகளைப் போர்த்துவதற்கு தார்ப்பாய்களை அரசு வழங்க வேண்டும். மேலும், விவசாயிகளின் இடத்துக்கே சென்று நெல்லைக் கொள்முதல் செய்யும் வகையில் நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். உரத் தட்டுப்பாட்டைக் களைய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெட்ரோல்- டீசல்- சமையல் காஸ் விலை உயர்வு சாமானிய மக்கள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களையும் பாதித்துள்ளது. மத்திய- மாநில அரசுகள் இணைந்து பெட்ரோலியப் பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, மத்திய அரசு இதில் தீவிர கவனம் செலுத்தி மக்கள் சுமையைக் குறைக்க வேண்டும்.

7 பேர் விடுதலை விவகாரத்தில் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு சரியா? தவறா? என்று காங்கிரஸ்தான் கூற வேண்டும்’’.

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பின்போது கட்சியின் பொதுச்செயலாளர் விடியல் சேகர், மாவட்டத் தலைவர்கள் குணா, ரவி, ரவீந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x