Published : 31 Oct 2021 03:08 AM
Last Updated : 31 Oct 2021 03:08 AM

மாரடைப்புக்கு வழிவகுக்கும் கடும் உடற்பயிற்சி: 2 இளம் நடிகர்களின் உயிரை பறித்த ‘ஃபிட்னஸ் விருப்பம்’

கன்னட திரையுலகில் ‘ஃபிட்னஸ் ப்ரிக்' ஆக இருந்த நடிகர்கள் சிரஞ்சீவி சர்ஜா, புனித் ராஜ்குமார் ஆகிய இருவரும் உடற்பயிற்சியின்போது ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக உயிரிழந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

நடிகர் அர்ஜூனின் அக்கா மகன்சிரஞ்சீவி சர்ஜா (36), கடந்த ஆண்டு ஜூன் 7-ம் தேதி தனது வீட்டில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரைபரிசோதித்த மருத்துவர்கள் மருத்துவமனைக்கு வரும் வழியிலே சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இந்நிலையில், 46 வயதுடைய நடிகர் புனித் ராஜ்குமாரும் உடற்பயிற்சியின் போது நெஞ்சுவலிக்கு ஆளாகி இருக்கிறார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் ஏற்பட்ட மாரடைப்பினால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, சமூக வலைதளங்களில், ‘‘கடுமையான உடற்பயிற்சி மாரடைப்புக்கு வழிவகுக்கிறதா?'’ என ஏராளமானோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து பிரபல மருத்துவர் பி.எம்.ஹெக்டே ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியதாவது:

நமது இதயம் மென்மையானது

பல நேரங்களில் நீண்ட நேர கடுமையான உடற்பயிற்சி திடீர் மாரடைப்புக்கும், திடீர் இதய செயலிழப்புக்கும் வழிவகுக்கிறது. ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்பவர்கள், நீண்ட நேரம் வேகமாக ஓடுபவர்களுக்கு அதிகளவில் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன.

நமது இதயம் மிகவும் மென்மையானது. ஃபிட் ஆக இருக்க வேண்டும் என்பதற்காக நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதால் இதயம் பலவீனம் அடைகிறது. தொடர்ச்சியாக கடும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதால் இதய வால்வுகள் கூடுதல் தடிமனாகவும், அதில் அடைப்புகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதனாலேயே அதிகமான எடை தூக்குவது, இடைவெளி இல்லாமல் கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்வது ஆகியவற்றால் நெஞ்சுவலி, திடீர் மாரடைப்பு ஏற்படுகிறது.

ஏற்கெனவே இதயம், நுரையீரல் தொடர்பான நோய்கள் இருப்பவர்கள் கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. 30 நிமிடங்கள் அளவுக்கு மிதமான உடற்பயிற்சி மேற்கொள்வதும், நமது அன்றாட பணிகளை நாமே செய்தாலே உடல்ஆரோக்கியமாக இருக்கும். இவைஎல்லாவற்றையும் விட மனதைமகிழ்ச்சியாக வைத்துக்கொண்டாலே மாரடைப்பு ஏற்படாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x