

நெருக்கடி காரணமாக பதவியை ராஜினாமா செய்த கடையம் ஒன்றியக் குழு தலைவர் செல்லம்மாள், தன்னிடம் திமுக மாவட்டப் பொறுப்பாளர் ரூ.1.10 கோடி கேட்டதாக கூறும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட திமுக பொறுப்பாளர் போலீஸில் புகார் அளித்தார்.
தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் 17 வார்டுகள் உள்ளன. இதில், திமுக சார்பில் 11 பேர், அதிமுக சார்பில் 5 பேர்,காங்கிரஸ் சார்பில் ஒருவர் வெற்றிபெற்றனர். திமுக பெரும்பான்மை பெற்ற நிலையில், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவராக, ஜெயக்குமார் என்பவரை தேர்ந்தெடுக்குமாறு, திமுக தலைமை உத்தரவிட்டிருந்தது. கடந்த 22-ம் தேதி நடந்த மறைமுக தேர்தலில் திமுகவைச் சேர்ந்த செல்லம்மாள் 13 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவைச் சேர்ந்த ஜெயக்குமார் 4 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
அதிமுக தரப்பில் 5 பேர் மட்டுமே உள்ள நிலையில், மேலும் 8 வாக்குகள் திமுகதரப்பில் இருந்தே செல்லம்மாளுக்கு கிடைத்திருக்க வேண்டும். ஜெயக்குமாருக்கு பதில்,திமுக உறுப்பினர்கள் திடீரென செல்லம்மாளைத் தேர்ந்தெடுத்ததற்கு, திமுக ஒன்றியச் செயலாளர் குமாரின்ஏற்பாடே காரணம் என கட்சிமேலிடத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக ஒன்றியச் செயலாளர் பொறுப்பில் இருந்தும், கட்சியில் இருந்தும் குமார் நீக்கப்பட்டார்.
நேற்று முன்தினம் தனது ஒன்றியக் குழுத் தலைவர் பதவியை செல்லம்மாள் திடீரென ராஜினாமா செய்தார். கட்சி மேலிடத்தின் நிர்ப்பந்தம் காரணமாகவே அவர் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாவட்டதிமுக பொறுப்பாளர் பொ.சிவபத்மநாதன் ரூ.1.10 கோடி கேட்டதாக செல்லம்மாள் பேசுவதுபோன்ற விடியோ நேற்று வெளியாகி, சர்ச்சையை அதிகப்படுத்தியது.
தென்காசி எஸ்பி.யிடம், தென்காசி மாவட்ட திமுக பொறுப்பாளர் பொ.சிவபத்மநாதன் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது:
ஒன்றியக் குழு தலைவரான செல்லம்மாள், தனது குடும்ப சூழ்நிலை காரணமாக பதவியை ராஜினாமா செய்துஉள்ளார். இதற்கும், எனக்கும்எவ்வித தொடர்பும் கிடையாது.நான் அவரிடம் ரூ.1.10 கோடிகேட்டு மிரட்டியதாக வதந்தியை பரப்பி வருகிறார்கள். பொய்யான செய்தியை பரப்பிவரும் செல்லம்மாள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.