

முல்லை பெரியாறு அணையில் மேலும் ஒரு மதகு திறக்கப்பட்டு கூடுதல் நீர் கேரளாவுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. ஏற்கெனவே 2 மதகுகள் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதற்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மேலும் 1 மதகு திறக்கப்பட்டுள்ளது.
முல்லை பெரியாறு அணையில் இருந்து நேற்று முன்தினம் கேரளப் பகுதிக்கு நீர் திறக்கப்பட்டது. அணையில் உள்ள 13 மதகுகளில் 3 மற்றும் 4-வது மதகுகள் திறக்கப்பட்டு விநாடிக்கு 514 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அன்று இரவு வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு 825 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று 2-வது மதகும் திறக்கப்பட்டு மொத்தம் 1,675 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
வழிகாட்டு நெறிக்கு எதிரானது
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் 142 அடி உயரத்துக்கு நீர்தேங்கும் முன்பே கேரளப் பகுதிக்கு நீர் திறக்கப்பட்டது குறித்து, 5 மாவட்ட விவசாயிகள் ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதை பொருட்படுத்தாமல் ஒவ்வொரு நாளும் கூடுதல் நீரை கேரளாவுக்கு கொண்டு செல்வது உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை அவமதிப்பதாக உள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
தமிழக அரசை கேட்காமல் கேரள அரசு தன்னிச்சையாக செயல்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: கேரளாவின் இதுபோன்ற நடவடிக்கையை கண்டித்து கடந்த ஒரு வாரமாக தேனி மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். 5 மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து தமிழகத்தின் நலன்களை காக்க முன்வர வேண்டும் என்றனர்.