

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பசும்பொன்னில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பெரியாறு அணை முதல் முறையாக தமிழக அரசின் அனுமதி பெறாமல் கேரள அரசால் திறந்துவிடப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. மாநில அரசுக்கு தெரிந்துதான் இது நடந்ததா? அனுமதி பெற்றுத்தான் செய்தனரா என்று தெரியவில்லை. அணையில் நீர்மட்டம் 136 அடியை எட்டும்போது அவசரமாக திறந்து விடப்பட்டுள்ளது. தமிழக அமைச்சர்கள் எங்களுக்குத் தெரியும் என்று கூறியுள்ளனர். இது விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெளிவாகக் கூற வேண்டும்.
தமிழக அரசு அனுமதியின்றி கேரள அரசு தங்கள் விருப்பம்போல் திறந்துள்ளனர். இதை பார்க்கும் போது திமுக அரசு தமிழக உரிமையை விட்டுக்கொடுக்க தயாராகிவிட்டதா என்பதை முதல்வர் தெரிவிக்க வேண்டும் என்றார்.
அமைச்சர்கள் மீது நடவடிக்கை
தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறும்போது, “பெரியாறு அணையில் நீரை திறந்துவிட்ட கேரள அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் அனுமதிஇன்றி அணை திறக்கப்பட்டதா என்பதற்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளிக்க வேண்டும்” என்றார்.