

காற்று மாசுபடுதல் இதயத்திற்குத் தீங்கு விளைவிக்கிறது, நுரையீரலுக்கு அழுத்தத்தையும் மூளைக்கு பாதிப்பையும் ஏற்படுத்துகிறது என்று மருத்துவர் விளாடிமிர் ஹசின்ஸ்கி தெரிவித்துள்ளார்.
டி.எஸ்.ஸ்ரீனிவாசன் அறக்கட்டளையின் 41-வது கருத்தரங்கு ‘டிமென்சியா, இதய நோய் மற்றும் பக்க வாதத்தைத் தடுக்கும் வகையில் மூளை நலத்தை முன்னெடுப்பது’ எனும் தலைப்பில் இந்த ஆண்டு மெய்நிகர் முறையில் நடைபெற்றது. மூளைநலத்தை மேம்படுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் மேற்கொள்ள வேண்டிய கவனம் எதிர்கால அபாய மேலாண்மையில் இருந்து நிகழ்காலப் பலன்களுக்கு மாற்றப்பட வேண்டுமென்பதை அடிக்கோடிட்டுக் காட்டியது.
இந்தக் கருத்தரங்கில் பேசிய டாக்டர் விளாடிமிர் ஹசின்ஸ்கி நம்முடைய உடல் நலம் மற்றும் மன நலம், சமூக நல்வாழ்வு, ஆரோக்கியமான செயல்பாட்டுத் திறன், கலை சார்ந்த படைப்புத் திறன் ஆகியவற்றுக்கு மூளை நலம் மிக மிக முக்கியம் எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “மூளைக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் பக்கவாதம், இதய நோய், டிமென்சியா (Dementia, Stroke and Heart Disease) ஆகிய நோய்கள், இன்று உலகம் முழுவதும் மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் இதன் சூழ்நிலை மிக மோசமாக உள்ளது. பெரும்பாலான மருத்துவர்கள் டிமென்சியாவை இயற்கையானது எனவும், முதுமையின் தவிர்க்க முடியாத பகுதி எனவும் எண்ணுவது துரதிர்ஷ்டவசமானது. டிமென்சியா ஆபத்துக் குறைப்பு பிரச்சாரத்தை உள்ளடக்கிய உலக சுகாதார நிறுவனத்தின் உலகளாவிய செயல்பாட்டுத் திட்டத்திற்கு, மொத்தமுள்ள 194 உறுப்பு நாடுகளில் 27 மட்டுமே ஒப்புதல் தெரிவித்துள்ளன.
பக்கவாதம், இதய நோய் வருவதற்கான சாத்தியத்தை அதிகப்படுத்துவதோடு, டிமென்சியா வருவதற்கான வாய்ப்புகளை இரு மடங்காக அதிகரிக்கிறது. டிமென்சியா, பக்கவாதம், இதய நோய் ஆகிய மூன்றும் பொதுவான அபாயங்கள் மற்றும் பாதுகாக்க வேண்டியதற்கான காரணங்களைப் பகிர்ந்துள்ளன. உயர் ரத்த அழுத்தம், உடற்பயிற்சியின்மை, உப்பு சர்க்கரை கொழுப்பு ஆகியன அதிகமுள்ள டயட் மற்றும் பாதுகாக்கும் அம்சங்கள் ஆகியன அபாயக் காரணிகளில் அடங்கும். மூளை நலத்தை ஊக்குவிப்பதன் மூலம் இம்மூன்று நோய்களும் ஒரே மாதிரியான பாதுகாப்பு காரணங்களைப் பகிர்ந்து கொள்வது என்பது அவற்றை ஒருசேர ஒன்றாகப் பார்க்க வேண்டிய அவசியத்தை உருவாக்கியுள்ளன’’ என்று விளக்கினார் டாக்டர் விளாடிமிர் ஹசின்ஸ்கி.
உலகம் முழுவதும் ஸ்கெமிக் இதய நோய் (ischemic Heart Disease), பக்கவாதம் மற்றும் டிமென்சியாவினால் முறையே 158.6 மில்லியன், 122.4 மில்லியன் மற்றும் 74.7 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் காற்று மாசுபாட்டின் பங்கு பற்றிப் பேசியவர், “மாசுபடுதல் இதயத்திற்குத் தீங்கு விளைவிக்கிறது, நுரையீரலுக்கு அழுத்தத்தையும் மூளைக்கு பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. கண்டங்கள் மற்றும் பெருங்கடல்களைச் சூழ்ந்துள்ள வளிமண்டலத்தில் காற்றின் வேகமான ஓட்டங்கள் இருந்துவரும் நிலையில், அந்தக் காற்றையே நாம் சுவாசிக்கிறோம். உதாரணமாக, டெல்லியில் உள்ள காற்று மாசுபாடு பல மைல் தொலைவிலுள்ள கனடாவையும் பாதிக்கும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் நிறைவுறும்போது மாசுபாட்டைக் குறைப்பதற்கான அவசியமும் அதிகரிக்கிறது” என்று தெரிவித்தார்.
மூளை நலத்தை மேம்படுத்துவதில் ஒவ்வொரு மனிதரும் கவனம் செலுத்த வேண்டுமென்று அறிவுறுத்திய டாக்டர் விளாடிமிர் ஹசின்ஸ்கி, “பக்கவாதங்களைப் பொறுத்தவரை, அவற்றில் பாதி தடுக்கக்கூடியவை. ஆனால், நான்கு பேரில் ஒருவர் மட்டுமே பக்கவாதத்திற்கான அபாயக் காரணியை அடையாளம் கண்டு உணர முடிகிறது. குடும்பத்தினரில் யாருக்காவது உயர் ரத்த அழுத்தம் இருந்தால் உணவில் உப்பைக் குறைத்துக் கொள்வது மற்றும் சீராக உடற்பயிற்சி செய்வது போன்றவற்றின் மூலம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.
மற்றொரு பக்கம், குடும்பத்தினரில் சர்க்கரை வியாதி பாதிப்பு தொடர்ந்து இருக்கிறதா என்பதையும் அறிய வேண்டும்; அப்படி இருப்பின், நீங்கள் உங்களது உடல் எடை அதிகரிக்காமல் இருக்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இது மூளை நலத்தைச் செழுமைப்படுத்தும்; இதுவே ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கான அடிப்படை. அது மட்டுமல்லாமல், நீண்டகால அடிப்படையில் பக்கவாதம் அல்லது மாரடைப்பு அல்லது டிமென்சியா ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் குறைக்கிறது. இந்த வழியில் பல ஆண்டுகளுக்குப் பிறகு நமக்கு ஏற்படும் பேரழிவைத் தவிர்க்க முடியும். மூளை நலத்தை முன்னெடுப்பதன் மூலமாக, எதிர்கால அபாயங்களில் இருந்து தற்காலப் பலன்களை கருத்தில் கொண்டு மாற வேண்டியதன் அவசியத்தை இது வலியுறுத்துகிறது.
சுகாதாரமான தூக்கம், உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவுப் பழக்கம் போன்ற நம்மால் முடிகிற இலக்குகளை அக்கறையுடன் மேற்கொள்வதன் மூலம் மூளை நலத்தை நாம் மேம்படுத்தலாம். இந்தப் பழக்கவழக்கங்களை நாம் உறுதியுடன் தொடர்ந்து மேற்கொள்ள, மற்றுமொருவருடன் பார்ட்னராக நாம் இணைந்து மேற்கொள்வது சிறப்பான பலன்களை அளிக்கும் ஒன்றாக இருக்கும். உறுதிப்பாட்டை வேறொருவருடன் சேர்ந்து மேற்கொள்வது சிறந்ததாக இருக்கும். மூளை நலமிக்க தனிநபர்கள் சுறுசுறுப்பாகச் செயல்படும் ஆற்றல் மிக்கவர்களாகவும் மகிழ்ச்சிகரமானவர்களாகவும் இருக்கின்றனர். பக்கவாதம், இதய நோய், டிமென்சியாவைக் கூட்டாகத் தடுக்கும் ஒரு விரிவான, எளிதில் பின்பற்றக்கூடிய அணுகுமுறையே மிக துரிதமான முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும்” என்று டாக்டர் விளாடிமிர் ஹசின்ஸ்கி தெரிவித்தார்.