

இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நாட்களைக் கடந்து தடுப்பூசி செலுத்தாத நபர்களின் விவரங்களை எடுத்து அவர்களின் இல்லங்களுக்குச் சென்று சீட்டு (Slip) வழங்கி, தகவல் தெரிவிக்கப்படுவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (30.10.2021 ) பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம் கஸ்தூரிபாய் நகர் குடியிருப்புப் பகுதியில் நடைபெற்ற ஏழாவது மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:
''தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 73 லட்சத்து 91 ஆயிரத்து 6 நபர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 70 சதவீதம் முதல் தவணைத் தடுப்பூசியும், 29% இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை கோவிட் தடுப்பூசி செலுத்துவதில் மிகச் சிறப்பான முறையிலே செயல்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியாவிலேயே மாற்றுத்திறனாளிகளுக்கும், முதியோர்களுக்கும் அவர்களின் இல்லங்களுக்குச் சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மாநகராட்சி சிறப்பாகச் செயல்படுத்தியது.
தற்போது இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தவேண்டிய நாட்களைக் கடந்து தடுப்பூசி செலுத்தாத நபர்களின் விவரங்களை எடுத்து அவர்களின் இல்லங்களுக்குச் சென்று சீட்டு (Slip) வழங்கி தகவல் தெரிவிக்கப்பட்டு, இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரையில் 87% மக்களுக்கு முதல் தவணைத் தடுப்பூசியும், 48% மக்களுக்கு இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் செலுத்தியுள்ளது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 35 சதவீதம் மட்டுமே இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதேபோன்று கர்ப்பிணித் தாய்மார்கள், ஆதரவற்றவர்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் மலைவாழ் மக்கள் போன்ற பல்வேறு தரப்பு மக்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்மாதிரியாகத் திகழ்கிறது.
நேற்று இரவு வரை சுமார் 50 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை கோவாக்சின் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்கள் 13 லட்சம் பேர் உள்ள நிலையில் 3 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் இருந்தன. தமிழக முதல்வரின் ஆலோசனையின்படி மத்திய அரசிடம் துறைச் செயலாளருடன் நான் நேரடியாகச் சென்று 10 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யும்படி கேட்டுக்கொண்டேன்.
அதனடிப்படையில் நேற்று மத்திய அரசின் சார்பில் 4 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன. தற்போது 7 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதால் அனைத்து முகாம்களிலும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டிய நபர்கள் தாராளமாகச் சென்று கோவாக்சின் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம்.
இதேபோன்று 48 லட்சம் நபர்களுக்கு இரண்டாம் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தவேண்டி உள்ளது. அரசிடம் 53 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதால் இரண்டாம் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டிய நபர்களும் இந்த முகாம்களில் பங்கு பெற்றுப் பயனடையலாம்''.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.