Published : 30 Oct 2021 12:15 PM
Last Updated : 30 Oct 2021 12:15 PM

பள்ளிகள் திறப்பு; விருந்தினர்களைப் போல மாணவர்களுக்கு வரவேற்பு கொடுங்கள்: முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

நவம்பர் 1ஆம் தேதி மீண்டும் பள்ளிக்குப் பயில வரும் குழந்தைகளை நேசமுடன் வரவேற்போம் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் இன்று (அக். 30) வெளியிட்ட அறிக்கை:

"கரோனா என்ற பெருந்தொற்றுக் காலம் முடிவுக்கு வந்து மெல்ல மெல்ல ஊரடங்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அனைத்திலும் குறிப்பாக வரும் நவம்பர் 1ஆம் நாள், பள்ளிகளில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகள் தொடங்கப்பட இருக்கின்றன. பள்ளிகளை நோக்கித் துள்ளிவரும் பிள்ளைகள் அனைவரையும் வருக, வருக என்று நான் வரவேற்கிறேன்.

இருண்ட கரோனா காலம் முடிந்து ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிய பயணத்தை மாணவ, மாணவிகள் அனைவரும் தொடங்க இருக்கிறீர்கள். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்ற நம்பிக்கையுடன் கல்விச் சாலைக்குள் உங்களை நீங்கள் ஒப்படைத்துக் கொள்ளுங்கள்.

1 முதல் 8 வரையிலான வகுப்புகள் கிட்டத்தட்ட 600 நாட்களுக்கும் மேலாக நடைபெற இயலாத நிலை இருந்தது. ஏறத்தாழ ஒன்றரை ஆண்டு காலம் அந்த வகுப்பைச் சேர்ந்த பிள்ளைகள் பள்ளிகளுக்குள் வர இயலாத சூழல் இருந்தது. கரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைத்து, கல்விச் சாலைகளின் கதவுகளைத் திறந்துள்ளது தமிழக அரசு. இந்த உன்னதமான சேவைக்கும் உழைப்புக்கும் காரணமான அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு பள்ளிக்கு ஆர்வத்துடன் வரும் குழந்தைகளுக்கு உற்சாகமூட்டும் வகையிலும், நம்பிக்கை ஊட்டும்வகையிலும் அவர்களை இன்முகத்துடன் வரவேற்பது நம் அனைவரின் கடமையாகும்.

கல்விச் சாலைகளின் கதவுகளை நோக்கி வரும் மாணவர்களை வரவேற்க நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களையும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளையும், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களையும், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளையும், தலைமை ஆசிரியர்களையும், ஆசிரியர்களையும் கேட்டுக்கொள்கிறேன். விருந்தினர்களை வாசலுக்கு வந்து வரவேற்பதைப் போல வரவேற்பு கொடுங்கள் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

ஏற்கெனவே அவர்களுக்கு அறிமுகமான பள்ளியாக இருந்தாலும், ஒரு பெரும் நெருக்கடிக்குப் பிறகு அந்தப் பிள்ளைகள் வருகிறார்கள். 'கரோனா'வுக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், 'கரோனா குறித்த பயம்' மக்கள் மனதில் இருக்கிறது. அதுவும் பள்ளிக் குழந்தைகள் மத்தியில் அதிகம் இருக்கிறது. ஒருவிதமான பரிதவிப்புடன் வரும் பிள்ளைகளின் பயம் போக்கி அரவணைக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி வரவேற்பு கொடுங்கள். இனிப்புகளை வழங்குங்கள். மலர்க் கொத்துகளையும் வழங்கலாம். எதை வழங்கினாலும் அத்தோடு அன்பையும் அரவணைப்பையும் நம்பிக்கையையும் சேர்த்து வழங்குங்கள்.

முதல் இரு வாரங்களுக்கு மாணவர்களுக்கு உற்சாகமும் நம்பிக்கையும் ஊட்டும் வகையிலான கதை, பாடல், விளையாட்டு, வண்ணம் தீட்டுதல், நினைவாற்றலை வளர்ப்பதற்கான விளையாட்டு உத்திகள் போன்றவற்றை வகுப்பறைகளில் வழங்குங்கள் என்று ஆசிரியர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக முறையான பள்ளி சார்ந்த கற்றலில் குழந்தைகள் ஈடுபட இயலாத காரணத்தால் அந்தந்த வகுப்புக்குரிய திறன்களை முழுமையாக அடைய முடியாத நிலை இருக்க வாய்ப்புள்ளது. இதனை ஈடுசெய்யும் விதமாக ஆசிரியர்கள் செயல்பட வேண்டும். அதற்கான புத்தாக்கப் பயிற்சியை ஆசிரியர்கள் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

என்னுடைய அன்பார்ந்த வேண்டுகோளை ஏற்று, மாணவச் செல்வங்கள் பள்ளிக்கு வரும் நாளை இனிய நாளாக மாற்றுங்கள். பள்ளிக்கு வரும் பிள்ளைகளை நேசமுடன் கண் போலப் போற்றுங்கள்.

மகிழ்ச்சியான சூழலை உருவாக்குவதன் மூலமாக மாணவர்ளை மீண்டும் உற்சாகப்படுத்துவோம்!மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதன் மூலமாக எதிர்கால மனித ஆற்றலை உருவாக்குவோம்!இதன் மூலமாக மாணவர்களை உற்சாகப்படுத்துவதற்காக மட்டுமல்ல, நமக்கும் நமது பள்ளிக்கால உற்சாகத்தைப் பெறலாம்.

வாருங்கள்!

நாம் அனைவரும் சேர்ந்து நம் குழந்தைகளைக் கொண்டாடுவோம் !".

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x