Published : 30 Oct 2021 08:19 AM
Last Updated : 30 Oct 2021 08:19 AM

முல்லைப் பெரியாறு; தமிழக மக்களின் உரிமை: கேரள அரசு கேடு செய்ய முனைகிறது- வைகோ குற்றச்சாட்டு

முல்லைப் பெரியாறு அணை தமிழக மக்களின் உரிமை. அதில் கேரள அரசு கேடு செய்ய முனைகிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

2014 ஆம் ஆண்டு, மே 7ஆம் தேதி, முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரை நிலைநிறுத்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் 138 அடியிலேயே இடுக்கிக்கு தண்ணீரைத் திறந்துவிட்டார். மூன்று ஆண்டுகளாக தமிழ்நாடு படகு பயன்படுத்த கேரள அரசு அனுமதிக்கவில்லை. 20 ஆண்டு காலமாக முல்லைப் பெரியாரில் மின்சாரத்தைத் தடுத்து நிறுத்திவிட்டார்கள்.

யானை, கரடி, புலி, காட்டு மாடு போன்ற வனவிலங்குகள் வரும் இடத்தில் அமைந்துள்ள தமிழக அலுவலக அணைக்கட்டில் குடியிருப்பவர்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருக்கின்றார்கள். அங்கு மும்முனை மின்சாரம் தரப்பட வேண்டும். அனைத்து அதிகாரிகளும், அணைக்கட்டில் பணிபுரியும் ஊழியர்களும் காய்கறி, மருந்து, அத்தியவசியப் பொருட்கள் வாங்குவதற்கு குமுளி, தேக்கடிக்கு தாராளமாகச் செல்ல அனுமதி வழங்க வேண்டும். தமிழக அதிகாரிகள், பத்திரிகை ஊடக அலுவலர்கள் அணைக்குள் சென்று வர அனுமதிக்க வேண்டும். வல்லக் கடவு பாதையை சரிசெய்து தர வேண்டும். பேபி அணையை வலுப்படுத்த இடையூறு செய்யக் கூடாது. முல்லைப் பெரியாறு அணையில் உள்ள தண்ணீரின் ஒவ்வொரு சொட்டும் தென் தமிழக மக்களுக்கு வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் நீராகும். ஆகவே 142 அடிக்கு மேல் வரும் தண்ணீர் கேரளாவில் உள்ள இடுக்கி அணைக்குத்தான் செல்லும். 555 அடி உயரம் உள்ள இடுக்கி அணையின் நீர் மட்டத்தை மழை காலங்களில் இடுக்கி மாவட்டத்தில் அபாய எச்சரிக்கை விடப்பட்டவுடன், இடுக்கி அணை நீர்மட்டத்தை 455 அடி என 100 அடி குறைக்க வேண்டும். கேரள அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டு உள்ளனர். இரு மாநில அரசுகளும் நேச உறவை வளர்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

கேரள மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக மக்கள் செய்துதர தயாராக உள்ளனர். இரு மாநில அரசுகளும் நல்லுறவை வலுப்பத்த வேண்டியது இன்றைய முன்னணிக் கடமையாகும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x