

முல்லைப் பெரியாறு அணையின் நீர் திறப்பு, பராமரிப்பு, கட்டுமானம் உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் தமிழக அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. 1979-ம்ஆண்டு இருமாநிலங்களும் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்நிலையில் அணையின் பாதுகாப்பு குறித்து கேரள அரசு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியதால் இப்பிரச்சினை உச்சநீதிமன்றம் சென்றது.
2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம்,142 அடி வரை நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்றுதீர்ப்பளித்ததுடன் அணையை கண்காணிக்க மூவர் குழுவையும் நியமித்தது. இருப்பினும் கேரளாஅணை குறித்து பல்வேறு சர்ச்சைகளை கூறி நிர்ணயித்தஅளவுக்கு நீர்மட்டத்தை உயர்த்தவிடாமல் செய்து வருகிறது. இதனால் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு 2014, 2015, 2018 என மூன்று முறை மட்டுமே 142 அடிக்கு நீர் தேக்கப்பட்டது.
இந்த ஆண்டு அதிக மழைப்பொழிவால் நீர்வரத்து உயர்ந்து 138 அடியை கடந்து 142 அடியை விரைவில் எட்டும் நிலையில் உள்ளது. இந்நிலையில் கேரள பகுதிக்கு நேற்று காலை நீர் திறந்து விடப்பட்டது. பொதுவாக தேனி ஆட்சியர், தமிழக அமைச்சர்கள்தான் நீரைத் திறப்பது வழக்கம்.கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் இதில் பங்கேற்பர். கடந்த 2018-ம்ஆண்டு 142 அடியாக உயர்ந்தபோதுகூட இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டது. ஆனால் இம்முறை இந்த மரபு மீறப்பட்டுள்ளது.
கேரள நீர்ப்பாசனத் துறை,வருவாய்த் துறை அமைச்சர்கள் ரோஷி அகஸ்டின், கே.ராஜன் ஆகியோர் அணையில் இருந்து நீரைத் திறந்தனர். இந்த நீர்வல்லக்கடவு வழியாக வண்டிப்பெரியார், உப்புத்துறை வழியாக இடுக்கி அணைக்குச் செல்கிறது. அங்கு மின்சாரம் தயாரிக்கப்பட்ட பிறகு இந்த நீர் அரபிக் கடலில் கலக்கிறது.
கேரள அரசின் இந்நடவடிக்கைக்கு தேனி, திண்டுக்கல், மதுரை,சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டவிவசாயிகள் கடும் எதிர்ப்புதெரிவித்துள்ளனர். பாசனத்துக்கும்,குடிநீருக்குமான அணை நீரை இப்படி மடைமாற்றம் செய்வது அணை கட்டப்பட்டதற்கான நோக்ககத்தை சிதைப்பதாக உள்ளது என்று அதிருப்தி கிளம்பி உள்ளது.
இதுகுறித்து 5 மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில், தமிழக கட்டுப்பாட்டில்உள்ள அணையை கேரள அமைச்சர்கள் திறப்பதே தவறு. இது மாநில இறையாண்மைக்கு விடப்பட்ட சவால். தேனி ஆட்சியரோ, தமிழக அமைச்சர்களோ பங்கேற்று இருக்க வேண்டும். இது உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை மீறிய செயல் ஆகும்.
வரும் நவ.11-ம் தேதி வரை 139.5 அடி வரை நீரை தேக்கலாம் என்று நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கிய நிலையில் கேரள அரசு அத்துமீறி செயல்பட்டுள்ளது. மாநில இறையாண்மை மீது நம்பிக்கை இழக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதை தவறான முன்னுதாரணமாக வைத்து கேரளா இதுபோன்ற செயல்களை மேற்கொள்ளும்.
சிவகங்கை, ராமநாதபுரத்துக்கு இன்னமும் தண்ணீர் சென்றடையவில்லை. எனவே தமிழக அரசு தலையிட்டு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இடுக்கி அணை மூலம் எவ்வித ஆயக்கட்டு பாசனமும் நடைபெறாத நிலையில் கடலில் கலக்கும் தண்ணீரால் முல்லைப் பெரியாறு அணையின் நோக்கம் சிதைவதாக உள்ளது என்று கூறினார்.
ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசனநீர் விவசாயிகள் சங்கத் தலைவர் அப்பாஸ் கூறுகையில், கேரளாவின் இந்த நடைமுறை அணை ஒப்பந்தத்தை மீறுவதாக உள்ளது. நீதிமன்ற உத்தரவையும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. அதிக நீர்வரத்து இருந்தும் 142 அடி இலக்கை கேரள அரசு ஒவ்வொரு ஆண்டும் தட்டிப்பறித்து வருகிறது. தேவையே இல்லாத நேரத்தில், கேரள பகுதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசுஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
514 கனஅடி நீர் வெளியேற்றம்
13 மதகுகளில் 3 மற்றும் 4-வதுமதகுகளின் வழியே விநாடிக்கு514 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. நீர்வரத்தைப் பொறுத்துவெளியேற்றத்தின் அளவும் மாறுபடும் என்று தெரிவிக்கப்பட்டுஉள்ளது. கேரள அமைச்சர்களுடன் இடுக்கி ஆட்சியர் ஷீபாஜார்ஜ், தமிழக பொதுப்பணித் துறையில் இருந்து பெரியாறு அணை செயற்பொறியாளர் ஷாம்இர்வின், உதவிப் பொறியாளர் ராஜகோபால் ஆகியோர் பங்கேற்றனர்.
1886-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி திருவிதாங்கூர்-பிரிட்டிஷ் அரசாங்கம் சார்பில் 999 ஆண்டுகள் அணை குத்தகை ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த ஒப்பந்த தினமான நேற்று தமிழக உரிமையையை மீறும் வகையில் கேரளா அணை நீரை திறந்து விட்டுள்ளது.
விவசாயிகள் வெளிநடப்பு
தேனி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் முல்லை பெரியாறு அணையின் தமிழக உரிமையை தட்டிப் பறிக்கும் கேரள அரசைக் கண்டித்து பல விவசாயிகள் பேசினர். பின்பு வெளிநடப்பு செய்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.