

சென்னையில் சுமார் 6 லட்சம் பேர் 2-ம் தவணை கரோனா தடுப்பூசி போடவில்லை. அவர்கள் இன்று நடைபெறும் கரோனா தடுப்பூசி முகாம்களில் பங்கேற்று, தடுப்பூசி போட்டுக்கொள்ள மாநகராட்சி அலுவலர்கள் நேரில் சென்று நினைவூட்டினர்.
இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்றைக்கட்டுப்படுத்த வார இறுதி நாட்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் அக்.28-ம் தேதிவரை 73 லட்சத்து 74 ஆயிரத்து 582 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கோவிஷீல்டு முதல்தவணை போட்டுக்கொண்ட 4 லட்சம் பேர், கோவேக்சின் போட்டுக்கொண்ட 1.87 லட்சம் பேர் 2-ம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.
இன்று தடுப்பூசி முகாம்கள்
இன்று (அக். 30) சென்னையில் 1,600 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ள நிலையில், 2-ம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நபர்களுக்கு மாநகராட்சி சார்பில் தொலைபேசி வாயிலாகவும், வீடுகளுக்கு நேரடியாகச் சென்று சீட்டு வழங்கியும், சிறப்பு முகாமில் தடுப்பூசி போட்டுக்கொள்ள நினைவூட்டி வருகிறோம். தொலைபேசி வாயிலாக 80 ஆயிரம் பேருக்கும், நேரடியாக ஒரு லட்சம் பேருக்கும் நினைவூட்டப்பட்டுள்ளது.
எனவே, இதுவரை கரோனாதடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களும், 2-ம் தவணை போட்டுக்கொள்ள வேண்டியவர்களும் சிறப்பு முகாம்களில் பங்கேற்று,தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.