முல்லை பெரியாறு அணை விவகாரம்; தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட ஓபிஎஸ் வேண்டுகோள்: அணை பாதுகாப்பாக உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தகவல்

முல்லை பெரியாறு அணை விவகாரம்; தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட ஓபிஎஸ் வேண்டுகோள்: அணை பாதுகாப்பாக உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தகவல்
Updated on
2 min read

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் தமிழகத்துக்கு சொந்தமான முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகவும், முறையாக இயக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஓபிஎஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய5 மாவட்டங்களின் நீர்ப்பாசன ஆதாரமாக விளங்கும் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை எப்படியாவது குறைக்க வேண்டும் என்பதற்காக அந்த அணை பாதுகாப்பானதல்ல என்ற பிரச்சாரத்தை கேரள அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றையும் தாக்கல் செய்துள்ளது.

முல்லை பெரியாறு அணைபழமையானது என்றும், சுண்ணாம்புக் கலவையால் கட்டப்பட்டது என்றும், அதிகளவில் நீர்த்தேக்கி வைத்தால் அழுத்தம் தாங்காமல் அணைக்கு சேதம் ஏற்படும் என்றும் கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. அத்துடன் புதிய அணை கட்டப்படுவதே அடுத்த நியாயமான நடவடிக்க என்றும் உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டினாலும், அணை பாதுகாப்பாகவே இருக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்த வழக்கு விசாரணை வரும் நவ.11-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வரும்போது கேரள அரசின் தவறான பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் வலுவான வாதங்களை திறமையான வழக்கறிஞர்கள் மூலம் வைக்க வேண்டும்.முதல்வர் இதில் தனிக்கவனம் செலுத்தி, கேரள அரசுடனான நல்லுறவை பேணி பாதுகாக்கும் அதே வேளையில், முல்லை பெரியாறு பாசன விவசாய பிரதிநிதிகளுடன் ஆலோசித்து, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விளக்கம்

இந்நிலையில், முல்லைபெரியாறு அணையின் இயக்கம்குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

முல்லை பெரியாறு அணைக்கு வரும் நீர், தேக்கப்படும் நீர், மழைப்பொழிவு ஆகியவற்றை தொடர்ந்து தமிழகம் கண்காணித்து வருகிறது. கேரளாவைச் சேர்ந்த தனிநபர் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் கடந்த அக்.28-ம்தேதி தமிழகத்தின் வாதங்களை கேட்டபின், நவ.11-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் வரை, மத்திய நீர்வளக்குழுமத்தின் ஒப்புதல் படியான நிர்ணயிக்கப்பட்ட நீர்மட்ட அட்டவணையை பின்பற்றும்படி ஆணையிட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட அட்டவணையின்படியே நீர்மட்டத்தை பராமரிப்பதற்காக, வைகை அணைக்கு தொடர்ந்து நீரை குகை பாதை வழியாக தமிழகம் கடத்துகிறது.

அதிகாரிகளுக்கு முன்னெச்சரிக்கை

கேரள அதிகாரிகளுக்கு உரிய காலத்தில் முன்னெச்சரிக்கை அளித்த பின் இன்று (நேற்று) காலை 7.30 மணிக்கு முல்லைப்பெரியாறு அணையின் இரு வழிந்தோடி மதகுகளை திறந்து விநாடிக்கு 500 கன அடி வீதம் நீரை வெளியேற்றி வருகிறது. இது மத்திய நீர்வளக் குழுமம் ஒப்புதல் அளித்துள்ள நீர்மட்ட அட்டவணையை பின்பற்றியே செய்யப்படுகிறது. அணை பாதுகாப்பாக உள்ளது. மத்திய நீர்வளக்குழுமத்தின் ஒப்புதல் படி அணையை கவனமாக தமிழக நீர்வளத்துறை இயக்கி வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in